நான்!
அனைவரும் சுவாசிக்கும்
காற்றாய் இருப்பேன்.
மென்மையான தென்றலாய்
மட்டுமல்ல...
முகமூடி மனிதர்களின்
நிஜத்தைக் கண்டால்
சீறிவரும்
சூறாவளியுமாய்...
எப்போதும் புன்னகையே
சிந்தும் மலராய் இருப்பேன்.
மனம் மயக்கும்
மணம் வீசுவதற்கு
மட்டுமல்ல...
புறஅழகை மட்டுமே
விரும்பி வரும்
வண்டுகளுக்கு
உயிரோடு விழுங்கும்
நெப்பந்தஸ் மலராய்...
அனைவரையும் தாங்கும்
பூமியாய் இருப்பேன்.
தன்னைத் தோண்டுபவரை
தாங்கும் நிலம் போலல்ல...
ஜாதிமத ஏற்றத்தாழ்வுகள்
அதிகமாகும் போது
வெடித்துச் சிதறும்
பூகம்பமுமாய்...
மொத்தத்தில் பாரதி கண்ட
புதுமைப் பெண்ணாய் அல்ல
பெண் பார்வையில்
பெண்ணாய்...
- கவிவள்ளி
புதுச்சேரி.
- கவிவள்ளி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-12-31