1. உடன்பிறப்பு
மருத்துவச்சிகளால்
அறுத்தெறிய முடிவதில்லை
உடன் பிறந்த
சாதியின் தொப்புள்க்கொடியை
2. அஃறிணை தேவதைகள்
பூவிதழ் நெய்த இருக்கைகளில்
செந்தேன் சிந்தும் விருந்து
வானவில் தைத்த சிறகுகளில்
வானில் துய்க்கும் புணர்ச்சி - இவை
யாவுமடங்கிய வாழ்க்கை
எட்டுப்பகலுக்குத் தான் என்றாலும்
பட்டினிச் சாவுகளில்லை
பட்டாம்பூச்சிகளிடம்
3. முதல் பயணத்தில்…
துண்டுச்சீட்டு கிழித்து
மை கசியும் பேனாவில் பெயரெழுதி
வயிற்றில் இறுக்கிய நூலின்
வலியைச் சுமந்தபடி
விரல்களிலிருந்து விடுதலையான
பட்டாம்பூச்சி பற்றிய
பால்ய நினைவுகள் பறந்துகொண்டிருந்தன
என் விமானத்திற்கு மேலே
4. சாவிக்கொத்து
நகரத்து வீடுகளின்
சாவிக்கொத்துகள் சொல்லும்
திருடர்களின் பலம்
5. நிழல்
நின்றுகொண்டிருக்கும்
பேருந்திற்கடியில்
ஓய்வெடுக்கிறது
ஓடிக் களைத்த
நாய்
6.அழுக்கு
வீடு சென்று
விடுமுறை கழித்து
கல்லூரி திரும்பிய
சில நாட்களுக்குள்ளாக
அழுக்கேறிவிடுகிறது
அம்மா வெளுத்த
உடைகளோடு ‘உள்ளமும்’
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-11-25