அவன் , அவள் , இறைவன்
-- சக்தி சக்திதாசன்
அவள்:
கண்ணும் கண்ணும் உத்தரவின்றிக்
கலந்ததாலே கனிந்த காதல் மலர்
காளையவன் கசக்கியதால் கருகியின்று
கண்ணீரில் கரைந்து மறைந்ததம்மா
அவன் :
நானொரு சுதந்திரப்பறவையடி
போகின்ற வழியில் கொஞ்சம்
பொழுதோடு இளைப்பாற - உன்
மனத்தோட்டம் அமர்ந்தேண்டி
அவள் :
கன்னியரின் வாழ்க்கையோடு
காளையர்கள் ஆடும் சடுகுடு விளையாட்டு
காகிதத்தில் எழுதுகையில் காதலது
காவியமாய் மலர்வதுண்டு
அவன் :
பருவத்தின் தேரோட்டம்
பாவையுந்தன் உடலாகும்
பார்த்தவுடன் பற்றிக் கொள்ளும்
காதலது நெருப்பாகும்
அவள் :
தாய் சொல்லைக் கேட்கவில்லை
தந்தை தன்னை மதிக்கவில்லை
தானாக போய்விழுந்தேன் மீனாக
தவிக்கின்றேன் வலையிலின்று
அவன்:
மனவாழ்க்கை வேறு
மணவாழக்கை வேறு
பணமுடைய மங்கையர்க்கு
இரண்டுமே வாய்ப்பதுண்டு
அவள்:
விதியென்று சொல்ல மாட்டேன்
வினையென்று கருதமாட்டேன்
வாழ்க்கையிலே வஞ்சியர்க்கு
வந்த நல்ல பாடமென்பேன்
அவன் :
காதலிப்பது எந்தன் உரிமை
நானோ என் பெற்றோர் உடமை
வாலிபத்தின் வனப்பில் உன்னுடன்
விளையாட்டுக் காதலடி
அவள் :
போதுமிந்தப் பொல்லாத வாழ்க்கை
போலி மனிதர் முகத்திரையின் வேஷம்
பாவையெந்தன் வாழ்கையினி நல்ல
பாடமாக மங்கையர்க்கு இருக்கட்டும்
இறைவன் : ( சிரிக்கின்றான்)
அவள் போட்ட கணக்கொன்று
அவன் போட்ட கணக்கொன்று
பெற்றோரின் கணக்கொன்று
கூட்டிக் கழித்தால் அனைத்தும்
கூத்தாடிகளின் கூடாரம்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-11-17