மன்னித்து விடடி...
தமிழே!
உன்னை வாழ்த்திப் பாடிடத்தான்
குரல்வளை துடைத்தேன்.
ஆனந்த ராகம் பாடிடத்தான் ஆசை
கிடைத்ததென்னவோ
முகாரியின் முகவரிகளே!
தாலாட்டும் ஒப்பாரியும்
உலக மொழிகளில்
உலக அழகியான உனக்கு மட்டுமே சொந்தமாம்!
ஒப்பாரி மட்டுமே பாட முடிகிறது என்னால்!
முலைப்பாலுக்கு பதில்
முப்பால் ஊட்டி
வளர்த்தானே வள்ளுவன்
என்ன யிற்று
அவன் வகுத்த
அதிகாரங்களுக்கு?
ஆத்திச்சூடி மூலம்
அவ்வை தந்த
அறிவு எங்கே போயிற்று?
பூப்பெய்திய உனக்கு
பாரதியும் தாசனும்
போட்டி போட்டு
ஊட்டிய வீரமும் நாணமும்
எங்கே போயிற்று?
கன்னித்தமிழாயிருந்த நீ
தமிழ்த்தாயானது ங்கிலத்துடன் புணர்ந்ததாலோ?
பிள்ளையும் பெற்று விட்டாயோ
தங்கிலீஷ் என்று?
ஆங்கிலத்தை நம்பாதே!
எகிப்து மொழி,
பாலி மொழி,
கிரேக்க மொழி,
ஹீப்ரு மொழி
என உலகெங்கும் வேலையைக் காட்டி விட்டான்.
அவ்வளவு ஏன்?
உன் சகோதரி
சமஸ்கிருதமும்
சாகக்கிடக்கிறாளே!
அச்சம் கொள்ளாதே!
அவனால் உன்னை அழிக்க முடியாது!
ஊருக்கொரு உருவத்தில் நீ
அலைவதனால் அல்ல...
நீயே நினைத்தாலும்
உன்னால் சாக முடியாது...
உயிருக்கு ஏதடி
உடல் சார்ந்த சாவு?
- பா நந்தன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2004-11-21