இல்லம்
அப்பா சூரியனுக்கு
அன்றாடம் இரவு வேலை!
எப்போது போவாரென்று
இரவு வரக் காத்திருந்து
ஆகாயப் புல்வெளியில்
அம்மா நிலாவையும்
அழைத்து வந்து விளையாடும்
நட்சத்திரப் பிள்ளைகள்!
விரைந்தோடும் நிலவைச்சுற்றி
'வெள்ளைவட்டம்' போடுவதும்
மறைந்து கொண்டும்
காற்றுக் கையால்
திறந்து முகம் மூடுவதுமாய்
கருப்புமேகப் போர்வைக்குள்
கண்ணாமூச்சி ஆட்டம்!
அதிகாலை வேலை முடிந்து
அப்பா சூரியன் திரும்பி வர
ஒளியிழந்து நிலவுத்தாய்
ஒடுங்கி நிற்க...
துள்ளாட்டம் போட்ட விண்மீன்கள்
துளிர்த்த வியர்வைப் 'பனித்துளியை'
துடைத்தெறிந்து விட்டு
அப்பா அடிப்பாரெனத்
தப்பியோடி மறைகிறதோ!"
ஏவுகணை வீச்சால் - கூரை
இடிந்த வீட்டில் பெற்றோர்
வருந்தியிருக்க......
வானை வியந்து ரசிக்கிறது...
குழந்தை!
- பனசை நடராஜன், சிங்கப்பூர். -
(feenix75@yahoo.co.in)
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2004-11-07