மெளன ராகம்.. அந்திச் சிகப்பு
01.
மெளன ராகம்
------------------
பாடும் புல்லாங்குழல் ஒன்று
ஊமை யாவதேன்
இந்தக் குழலுக்குள்
இன்னும்
பூபாளம் இருக்கிறது
மரணித்த மணவாளனும்
அதை எடுத்துச் செல்வதில்லை
வசை பாடும் வலியோரே
தேய்ந்த குழல் அல்லவே இவள்
தென்றல் தொட்டாடுகின்ற
அந்த கீற்றுனை கேளுங்கள்
இவள் பாடும் ராகங்களை
அது அறியும்
அழியாத ராகங்கள் எத்தனையோ
இந்தக் குழலுக்குள்ளே
தாள நயங்களோடு
நூல் வேலிக்குள் நின்று
மெளன ராகம்
இசைத்துக்கொண்டே இருக்கிறது
மனசுக்குள் ஏன் இன்னும் மத்தாப்பு
புதுமை படைத்திட
எத்தனை நாள் காத்திருப்பீர்.
02.
அந்திச் சிகப்பு
-------------------
அந்திச் சிகப்பு
அஸ்தமனத்தை கொட்டுவதல்ல
நாளைய உதயத்திற்கான
விடியல் வார்ப்புகளாய்
அடிவானில் வரையப்படுகின்றன
மாங்கனித் தீவின் மகுடத்திற்குள்ளும்
விடியல் வார்ப்புக்களை
குருதி நதியில் ஓடம் விட்டு
செதுக்கியுள்ளோம்
குட்டிச் சுவர் திண்ணைகளை விட்டு
வெட்டிப் பேச்சு வீரரை துறந்து
விண்ணையும் எட்டித் தொட்ட
எங்கள் வீர வேங்கைகளாய்
எழுந்து வா தமிழா
சத்திய சோதனைகள்
நித்திய வெள்ளம் அல்ல
நித்தம் வீழ்வதும்
நீதியின் கரங்களல்ல
செந்தமிழர் சிந்திய குருதியில்
செந்நெல் மணிகளையே
விதைத்துள்ளோம்
இமைகளுக்குள் ஈழம் இருக்கயில்
விழிகளுக்குள் இன்னும் ஏன் கங்கை
அந்திச் சிகப்பின் அச்சாரத்திற்குள்
அஸ்தம பேய்களை அழித்திடுவோம்
சத்திரியன் சாவதில்லை
சந்திர சூரியராகவே வாழுகிறார்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-05-26