உண்மை.. கொலுசொலி
01.
உண்மை
--------------
மேகங்கள் மறைத்தாலும்
மரங்கள் மறைத்தாலும்
இரவுகள் மறைத்தாலும்
இனிய வீடுகள் மறைத்தாலும்
உடைகள் மறைத்தாலும்
குடைகள் மறைத்தாலும்
சூரியனை மறைப்பது தற்காலிகமே.
அவ்வாறே ஒருநாளில்
நிரந்தரமாய் மறைத்தாலும்
கவசங்கள் பயந்துக்கொண்டே சொல்லும்
'சூரியனிடமிருந்து நீ மறைந்துக்கொள்ளலாம்
சூரியனை உன்னால் மறுக்கமுடியாது என்று."
அதேபோல்
இனங்கள் மறைத்தாலும்
மொழிகள் மறைத்தாலும்
மதங்கள் மறைத்தாலும்
நாடுகள் மறைத்தாலும்
செல்வங்கள் மறைத்தாலும்
சாதிகள் மறைத்தாலும்
உண்மையை மறைப்பதுவும் தற்காலிகமே.
அவ்வாறே எதிர்காலத்தில்
எதையெதையோ உருவாக்கி
நிரந்தரமாய் மறைத்தாலும்
அழிவுகள் பாய்ந்துக்கொண்டே சொல்லும்
'உண்மையிடமிருந்து நீ மறைந்துக்கொள்ளலாம்
உண்மையை உன்னால் மறுக்கமுடியாது என்று."
சோம்பேறிகளின் பரிணாமங்களே
நன்றாகப் பாருங்கள்,
சூரியன் நம் அன்புக்காக
தான் எரிவதைப் பற்றி கவலைப்படாமல்
ஏங்கிக்கொண்டே கதறுவதை.
உழைக்காமல் உணவுண்ணும்
பெருநோய் பரம்பரைகளே
நன்றாக உற்றுப்பாருங்கள்,
பூமி நம் அன்புக்காக
தன் ஓய்வைப் பற்றி கவலைப்படாமல்
ஏங்கிக்கொண்டே சுழலுவதை.
பேராசை கொண்டு
பொருள் சேர்த்துச் சாகும்
பரிதாபத்துக்குறியவர்களே
தயவுசெய்து
நன்றாக உற்றுப்பாருங்கள்,
எல்லாம் ஒன்றேயென்றும்
அனைத்தும் நமதேயென்றும்,
வா
விதவிதமாய்
உழைத்து உழைத்து
புதுவிதமான இன்பங்களை
பலவிதமாய் கொண்டாடுவோமென்று,
உண்மை
மீண்டும் மீண்டும் கத்திக்;கொண்டு
பித்துப்பிடித்தது போல்
ஏங்கிக்கொண்டே,
ஏன்
நீயும் நானும் கூட ஒன்றுதான்
என்று
கண்ணீரோடு சிரிப்பதை.
02.
கொலுசொலி
---------------------
அதோ
ஏழைத் தங்கையின்
செருப்பில்லா
கால்களைப் பார்த்து
கண்ணீர் விட்டேன.
அவள் காலாடை விளிம்பில்
மறைந்திருந்த கொலுசு
சத்தமாய் சிரித்தது,
பைத்தியக்காரா என்று.
ஐயோ
என்ன கொடுமையிது
எது முக்கியமென்பதே
தவறாக போதிக்கப்பட்டுள்ளதே
என் தங்கைகளுக்கு,
கதறியழுதேன்.
முட்டாளே
போதும் நிறுத்து
வாழக்கற்றுக்கொள்
தூ..
துப்பினாள் தங்கை.
புழுங்கி
புழுங்கியழுதேன்
மனதிற்குள்.
உண்மை
என்
ஒட்டுமொத்த கண்ணீரையும்
விலைக்கு வாங்கிக்கொண்டது
எனக்கெப்படி தெரியும்!!
உணர்ந்து
வாழ்த்தியது
வெள்ளி கொலுசு.
-ந.அன்புமொழி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-05-11