அரசி
மௌனத்தைக்கடப்பதற்கு
வழியென்ன சொல்
ஒரு கேள்விக்கும்
அதன் பதிலுக்குமிடையில்
அந்தரித்துக் கொண்டிருக்கும்
கனவுப் பூ
தன் நிறங்களின் மீது வரைகிறது
திவ்ய வாசனையோடான
ஆயிரமாயிரம் கதைகளை
படித்தறிய மனமிருந்தால் சொல்
மொழிபெயர்க்கலாம் அந்த ரகசியத்தின்
ஈரமூறிய அன்பின் ஆதர்;சத்தை
ஒரு காலம் கரைகிறது
இன்னும் எத்தனை பொழுதுகள்
இந்தத் தோணி
கரையிலேயே
கட்டப்பட்டிருக்கும்
அக்கரை போக இக்கரையில்
காத்திருக்கும் ஒரு பயணி
கரையில்
தனிமரத்;தின் மேலே வெயில்
கீழே
குளிரூற்றும் நிழல்
தோணியிலும் மரத்திலும் மாறிமாறிப்பறந்து
காதல் பெருக்கும் சிறு பறவைகளைக்கண்டாயா
அவற்றின் குதூகலத்தைப் பார்த்தாயா
ஒரு ராஜ்ஜியம்
உனக்காகவே காத்துக்கிடக்கிறது
-- வெளிவாசல்பாலன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-01-27