கல்லறை நினைவுகள்
அதிகாலை மல்லிகையை
பறித்துவந்து
அதில் வழிந்த
சொட்டுப் பனித்துளியை
நுனிவிரலில் ஏந்தி
இனிக்கிறது தேன்
என்று சொன்ன
அந்த நாள்…
ரயில் பாதையில்
நான்
ஓடி விழுந்தபோது
உன் கைக்குட்டையில்
எச்சில் தடவி
ஒத்தடம் கொடுத்த
நாள்…
கரப்பானுக்கு பயந்து
கூரையில் ஏறி
தவறி விழுந்ததாய்
நீ கண்ட கனவை
நள்ளிரவில்
தொலைபேசியில் கூறி
என் கனவை
கலைத்த நாள்…..
யாரோ ஒருவன்
வீதியில் இறந்துகிடக்க
அருகில் அவன் மனைவி
அழுவதைப்பார்த்து
என்னைக்கட்டிப்பிடித்து
எப்போதும் என்னுடன் இருப்பாயா
என ஏக்கத்துடன்
கேட்ட நாள்…
மாமாவுடன் பேசியபொழுது
இடையில் என்பெயரைக் கூறி
நீ தடுமாறித் தவித்ததை
அதே பயத்துடன்
மழலை மொழியில்
கூறிய நாள்…
நகம்கடிக்கும் பழக்கத்தை
விடச்சொல்லி
நீ விரல்கடித்துக்கொண்டு
அழுதுத் துடித்த
அந்த நாள்…
எப்போதோ நாம்
ஒன்றாய் பயணித்த
பயணச்சீட்டை
பத்திரப்படுத்தி
அடுத்தவருடம்
அதே தினத்தில்
முத்தம்கொடுத்தாயே
அந்த நாள்…
இவை அத்தனையும்..
ஏன்
இன்னும் எத்தனையோ
நினைவுகளை
நான்
அசைபோட்டுக்கொண்டிருக்கிறேன்….
யாரோ வைத்த
கண்ணிவெடியில் - நீ
கண்ணிமைக்கும் நேரத்தில்
சிதறிப்போனதைத் தவிர….
இன்னும்
என்றும் உன்
கல்லறையில்….
-ஆர். நிர்ஷன்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-12-31