விலை கம்மியாய் ஒரு ந(ர)கர அறை
மலை முகடுகளை
மேகங்கள் உரசிச்செல்வதுபோல
தொட்டு உரசும் கூரை
நெருக்கத்தைப் பறைசாற்றி நிற்கும்
ஒற்றை அடுப்பின்
சமையல் மேடை
படைசூழ்ந்த
எதிரி முகாமினைப் போல்
அடுக்குகளால் மறைக்கப்பட்ட
ஒற்றைக் கல்சுவர்
கசியும் பனிப்பொழிவும்
மென்சரத் தூறலும்
உச்சிப் போதின் பகலவனும்
கைகுலுக்கிச் செல்வர்
அவரவர்களுக்கான நேரங்களில்...
நாம் விடும் மூச்சில்
உமிழ்ந்த வெப்பம்
அறைசுற்றிக் கிடக்கிறது
சீக்காளியைப் போல!
_ செந்தமிழ்
2.
நிறுத்துங்க
நிறுத்தத்தை தவறவிட்டவளின்
இயலாமைக் குரல்
அடுத்த நிறுத்தம் வரை
காத்திரு!
அலட்சியத்துடன் நடத்துனர்
திடீரெனத் தாக்கும் காற்றில்
அலைவுற்றுத் திரியும்
ஒற்றைத் திரிபோல
கிடந்து தவிக்கிறது மனம்
மூதாட்டி இறங்கும்வரை
_ செந்தமிழ்
3.
மழை உதிர்த்த
காலைப்பொழுதொன்றில்
திடீரெனத் தோன்றினாய்
உன்னைக்கொல்ல ஆயத்தமாகிறார்கள்
உடலைத் துளைத்துச் செல்ல
துப்பாக்கியும் குண்டுகளும் தேவைப்படவில்லை
அறுபட்டுக் கூறுகளாக்க
கூர்கத்தியும்...
எரித்துச் சாம்பலாக்கத்
ஒரு குச்சி நெருப்பும்...
அணுஅணுவாய் உயிரெடுக்க
துளி விஷமும்...
தேவைப்படாமல்
சமையறைச் சம்புடத்தில்
துளி உப்பெடுத்து...
தரையைக் கெட்டியாகப் பிடித்திருந்த
கால்களற்ற உன் (அட்டை) உடல்
ஒரு பிசிறும் மிஞ்சாமல்
கரைந்துபோகிறது காற்றோடு
அவர்களின் மனசாட்சியைப்போல
_ செந்தமிழ்
முகவரி:
அ. மாரியம்மாள் (செந்தமிழ்)
கே_1, கே. பிளாக்,
விசாலாட்சி தோட்டம்,
வாரன் ரோடு,
மயிலாப்பூர், சென்னை _ 600 004.
செல்: 99413 51099
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-09-22