தனிமை
நினைவின் தாகந்தீர்க்கும்
தண்ணீர்நதி
திரும்பிப் பார்த்து திருந்த
வாய்ப்பளிக்கும் கால யந்திரம்
நினைவின் அலைகளில்
நெஞ்சைச் சுகமாய்
மிதக்கவிடக் கிடைத்த
கால அவகாசம்
சோகங்களின் ரணங்களை
கண்ணீர் மயிலிறகால்
வருட வாய்ப்பளிக்கும் வரம்
இதய அறைமுழுதும்
உணர்வுகளை மோதவிட்டு
எதிரொலி கேட்டு
அயர்ந்து கிடக்க
மனம்பாடும் அபசுரம்
துயரமது ஊற்றிய
இதயக்கோப்பையை
இறுதிவரை பருகி
மயங்கிவிழக் கிடைத்த மடம்
சூன்யத்தில் கண்கள் நிறுத்தி
சுகமாய்க் கண்ணீர் சுரக்க
சோகத்தைக் கழுவிடக்
கிடைக்கும் கருணையின் கரம்
நினைவுகளை அசைபோட்டு
அசைபோடும் இசைகேட்கும்
அமைதி நிறைந்த மயானம்
உணர்வுகளின் உளறல்களுக்கு
ஊக்கம் தந்தவன்
உயிர்தரச் செய்த சமாதானம்
அகலக்கால் வைத்தவன்
அறிவைத் தீட்டி
ஆக்கத்தில் நிலைக்கும் நிதானம்.
-- சு.துரைக்குமரன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-01-22