வலி உணர்தல்
"பிரிவு வலியில் தவித்தல்"
பற்றி
நீ என்ன அறிந்திருக்கிறாய்?
புலரும் பொழுதில்
ஒரு மல்லிகையின் வாசம்
சுமந்து வரும்
இளந்தென்றலையும்
விழுங்கமுடியாதபடி
தொண்டையில் சிக்கும்
விரகதாபம் பற்றி
உனக்கு என்ன தெரியும்?
நீ அவ்வப்போது
சிந்திச் சென்ற
புன்னகைப் பூக்களின்
நிறங்களுடனும் வாசனைகளுடனும்
எப்படித்தான்
நான் காலவெளி கடத்துவது?
கடற்கரையோர மணற் பரப்பில்
அந்திப் பொழுதொன்றில்
பிணைக்கப்பட்டிருந்த
நம்கைகளை
மேலும் இறுக்கியபடி
உன் உதட்டோரம் நீ பரப்பிய
சென்நிறப் பூக்களில்
ஆயிரம் வண்டுகளாய் மூழ்கிய
என் விழிச்சிறகுகளை
நான் எங்குலர்த்துவது?
அந்தப் பொழுதில்
நீ விட்டுச் சென்ற நினைவுகளின் சிதறல்களை
ஒவ்வொன்றாய் சேகரித்து
எப்படி நான் அசைபோடுவது?
உன் விழிகள் பேசிய
சத்தமற்ற ஒலிக்குவிப்புக்களால்
உருவாக்கப்பட்ட
உருவமற்ற கவிதைகளை
எப்படி நான் வாசிப்புக்குள்ளாக்கலாம்?
உன் உதடுபேசாத மொழிகளுக்கு
கற்பனையில் உருக்கொடுத்து
பல வண்ணங்கள் தடவி
வானவெளியில் பறக்கவிட்டுள்ளேன்
"என் பற்றிய"
அந்த நாள் ஞாபகங்களில் ஒன்றெனும்
எப்போதாவது உனக்கு நினைவில் வந்தால்
சற்றே தலைநிமிர்த்திப்பார்
மறைதலுக்கும் ஒளிர்தலுக்குமிடையே
என்னைப்போலவே
அலமந்து கொண்டிருக்கும் வானவில்.
-கலாவண்ணன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-06-05