சபதம்
சருகுகள் ஓதுங்கிகிடக்கும்
சகதிக்குள் தடையின்றி ஓடுகின்றது நீர்
சாக்கடையின் சகதிக்குள்
சிக்குண்டிருந்தது உனது சடலம்
நேற்றுக் காலை நீ கணவனுடன்
கரையில் உலவியதாய்
காற்றுடன் கலந்து செய்திகள் வந்தன
உடல் சுற்றிய ஒரு துணித்துண்டேனும்
உன் மீதில்லை
மனித தர்மங்களும் தார்மீக மதங்களும்
தரிப்பிடம் தேடி அலைந்து திரிந்தன.
தேசியத்தின் பேரால் ஒரு யோனி
பயங்கரவாதத்தின் பெயரால் மற்றொன்று
பலவந்தத்தின் பிடியில் இன்னுமொன்று
சுயநலத்தின் சூறையில் பிறிதொன்று
எத்தனை யோனிகள் எத்தனை உடல்கள்
இன்னும் அழிய உள்ளன
தோற்று விட்டதா மனித தர்மங்கள்
மனித உயர் விழுமியங்கள்
உயிர்த்தெழும் வரை
எமது யோனிகள்
எமது உடல்கள் மற்றொரு காமுகனைப்
பெற்றுப் போடாதிருக்கட்டும்.
-- சுல்பிகா
"உரத்துப் பேசும் உள்மனம்" கவிதைத்தொகுதியிலிருந்து.
- சுல்பிகா
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-01-30