சுயம்
என் அடையாளம்
குறித்த கேள்விகள்
கிளம்புகின்றன
பூதாகாரமாய்
அப்பனுக்கும்
அம்மைக்கும்
ஆயிற்று
உயிரும் உடலும்
எனது
புன்னகைகையை
காலம் கொண்டேகிற்று
என்னிடம் எனக்கென்று
ஏதுமில்லை
உனது
முத்தங்களையும்
நினைவுகளையும்
கூட
நீயே
சொந்தங் கொண்டாடுகிறாய்
யாரோடும் பகிர முடியாது போன
புன்னகையும்
முத்தங்களும்
துயரங்களும்
என்னுடையவைதானென்று
யாருக்குத்தெரியும்
என் வார்த்தைகளின்
அர்த்தம் கூட
எனதாயில்லை
மறுக்கமுடியாத்துயருள்
மூழ்கிய
எனது கவிதைகள்
என்னின்று அகன்றன
இப்போது
எனக்குள்
கேள்விகளை நிரப்புகிறது
தனிமை
புன்னகைக்கும்
வேதனைக்கும்
இடையிலான
விசாரணைகள் நிகழ்கின்றன
அழத்தோன்றாவொரு
மனக்காந்தல்
உனது
முத்தங்களிற்காய் ஏங்கும்
திடீரென்று
ஒரு பொழுதின்
துயருள் தோன்றி
எழுதவியலாது போன
கவிதை வெறுமையை
நிரப்புகிறது மனசுள்
நினைவறையின் மடிப்புகளினின்று
பறப்படுகின்றன
இன்னும்
பகிரப்படாத்துயரங்கள்
அழுவதற்கான
வெட்கங்கள் ஏதுமற்று
துளிக்கும்
என் கண்கள்.
--- த.அகிலன்
- த.அகிலன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2005-11-16