பூக்கள் ஆகிய...
பூக்கொடுத்துத்தான் புரியுமோ
என் நேசம் !
இத்தனை காலம்
என் கண்கள் சொல்லியது
உனக்குப்புரியவில்லை !
புரிந்து கொள்வதில் நீ தாமதம்
புரியாமல் கொல்வதில் நீ முந்தி...
எந்தத் துன்பமெனினும்
இதழ் கண்டிட்டால்
மறைந்தோடிவிடும் !
பூவிலும் சரி
உன் புன்னகையிலும் சரி...
முடிந்தால்
என் நேசிப்புகளோடு
நீ மோதிப்பார்
நான் சாய்ந்திடுவதில்லை !
நம்பிக்கை தரும்
தென்றல் மோதிச் சாய்ந்திடாத
என் தைரியப்பூக்கள்...
நான் பார்க்கையில்
வரம் தருவது
போலிருக்கும் !
நீ பார்க்க வேண்டி
தவம் தருவது
போலிருக்கும் !
சுயநலப்பூக்கள்...
இனி என்னிதயத்தில்
உன் ஞாபகங்கள்
நிரம்பிட இடமில்லை
நீ நிறைந்ததால் இடமில்லை !
பூக்கள் இடம்பெறலாம்
ஞாபகங்கள் வாசம்பெற...
பூத்ததும்
வாடிப்போகும்
மலர்போல் வஞ்சகமில்லை !
உன் அருகாமையில்
ஒவ்வொரு நொடியும்
பூத்திடுவேன்
ஆயுள்வரை அப்படியே...
உனக்கு
வெட்கம் கற்றுத்தந்தது
எம்மலரோ தெரியவில்லை
அவை திணறிப்போயிருக்கும் !
நீ எனக்குக் கற்றுத்தந்த
அன்பின் அழகினைக் கண்டு...
செடிகளின் பிடிப்பிலிருந்து
முழுவதும் கொட்டிப்போய் !
தரையோடு காய்ந்துபோய் !
இவ்விதழ்களின் நிலைதான்
உன் சந்திப்பினில்
என் சோகங்களின் நிலை...
ஒருவேளை உனக்கு
மலரும் என் மனதும்
ஒன்றெனப்படலாம் !
காய்ந்துவிட்டால்
வேறு மலர் உனக்கிருக்கலாம்
வேறு நீ மலருக்கில்லை...
பூக்கள் அழுது
பார்த்ததில்லை நான் ...
கல்லெறியும் குளம்
என்னோடு சேர்த்து
கலங்கியழுதது நிலா !
கல் நிறுத்திய பொழுதில்
அழகாய் நிலா !
மனம் இன்னும் அழுதபடி...
நான் அழுது
பார்க்கின்றன பூக்கள்...
---நிஹ்மத்
nihrasikow@yahoo.com
- நிஹ்மத்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2005-08-14