நட்புக்காலம்
என் கல்லூரி நாட்களை
நினைவில் வைத்துக்கொள்ள
உன் அறிமுகம்
என்னுள்
இனிமையுடன்
கலந்துள்ளது தோழனே !
சில நட்பின்
அளவுகளை
தூறலுடன் கணக்கிட்டால்
உன் நட்பு
என்னில் ஓர் அடைமழை !
இதயத்துடிப்புகளை
காணமுடியாது
ஆனால் உணர்ந்திடலாம்
இதைப்போல்தான் ஒரு நட்பின்
வலியும் உன்னால் உணரப்படுவதற்கு
எத்தனை நாள் காத்திருந்தது !
மழைக்காலங்களில்
சில தூறல்களில் மட்டுமே
மண்ணின் வாசனை புலப்படுமே
அதைப்போல்தான்
உன் நட்பில் மட்டும்
என் இதயத்தின் வாசம்
புலப்பட்டது !
உன் ஞாபகங்கள்
என் வீட்டில் நுழைந்தால்கூட
சிம்மாசனமிட்டு
உட்காரச்சொல்லுகிறேன்
உன் நட்பிற்கான
மரியாதை இது !
எவ்வளவு வெப்பம்
சூரியனுக்கு வலிக்குமோ...
இப்படித்தான் இருந்தது
உன் நட்பின் தாக்கம் !
ஓட்டமாய் ஓடிவந்து
கால் நனைத்துச்
சென்றுவிடும்
அலைகள் போலில்லை...
இதயம் நனைத்து
இன்றும் மனதில் ஒட்டியபடி
நீ !
------நிஹ்மத்
nihrasikow@yahoo.com
- நிஹ்மத்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2005-08-14