90களின் பின் அந்தி.. அன்பின் மீதான
பயங்கரத்தைக் கடத்தல்..வீடு.. கொடுக்கு நீர்
01.
90களின் பின் அந்தி
---------------------------
ஒரு ஊசாட்டமும் இல்லை
என் செம் மண் தெருவை
தார் ஊற்றி கொன்றது யார்
90களின் பின் அந்தியா இது
அப்போது காகங்கள் என்றாலும்
தெருவை கலைத்துக் கொண்டிருக்கும்
ராணுவ வீரர்களின் சூ கால்கள்
தெருவின் விரை மீது
ஊன்றி ஊன்றி மிதிக்கும்
ஜீப் வண்டிகளின்
டயர் தடங்களில் நசுங்கிய
கைப் பாவைகளைக் கேட்டு
எந்தக் குழந்தை என்றாலும்
அழுது வடிந்து கொண்டிருக்கும்
முரட்டு துப்பாக்கிகளைக் கண்டு
தெரு நாய்கள் குரைத்து குரைத்து
அச்சம் எழுப்பி
தெருவெல்லாம் கதறி ஓடும்
90-91 களின் அதிகாலை வெண் பனிக்குள்
உடல் கொடுகி விழி நிமிர்ந்து
கைகள் கெஞ்ச ஒவ்வொரு மின் கம்பங்களுக்கும்
உரமாக விதைக்கப்பட்டவர்களின்
குருதி சொட்டிய பரள் மண் துகள்கள்
எங்கள் உம்மாக்களின் கண்களுக்குள்ளும்
விழுந்து கரிக்கும்
ஒரு ஊசாட்டமும் இல்லை
கைகளும் கண்களும்
கறுப்பு துணியால் கட்டபபட்டு
சும்மா கிடந்தது தெரு
மார்பில் இரும்பு துப்பாக்கிகள்
அழுந்தியிருக்கவில்லை
'நீல' வானத்தில் பறவைகளின்
சஞ்சாரம் அறவே இல்லை பின் அந்தி 6.00 மணிக்கு
எங்கள் விளையாட்டு திடல்களில்
யுத்த விதை விழுந்து மண் பிளந்து
வேர் கொண்டு எழுந்த நாட்களில்
ஒன்றா இது
1999ல் பயத்தோடு விளையாடி கழித்த
முன் இரா ஒன்றில்
'ஜஃபர் மச்சான்' இனம் தெரியாத
இரண்டு பேரால் சுட்டு கொல்லப்பட்டார்
அவர் மெளத்தாகி கிடந்த
மஞ்சோண்ணா மர நிழல் மட்டும்தான்
அவர் மரணத்திற்கு சாட்சியாய்
இருந்தது
பின் அதையும் கதற கதற
சுட்டு கொன்றுவிட்டார்கள்
02.
அன்பின் மீதான பயங்கரத்தைக் கடத்தல்
-----------------------------------------------
இரு விழிகளுக்கும் மத்தியில்
கத்தியின் கூர் முனையை
அழுத்தி வைத்திருக்கிறாய்
விழித்துப் பார்க்கும் போதே
உன் அன்பின் மீதான
நீளப் பயங்கரம்
என்னை ஆட் கொண்டு விட்டது
நீ கத்தியின் பிடியில்
அழகான ஒரு மாளிகையை
அமைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாய்
உன்னுடைய கைகள் என்னை
வா வா என்று அழைத்தன
மிகப் பயங்கரமான உன் அன்பின் மீது
ஏறி நடக்க ஆரம்பித்துவிட்டேன்
நீண்ட தூரப் பயணத்தின் முடிவில்
நீயும் இருக்கவில்லை
நீ அமைத்த மாளிகையும் இருக்கவில்லை
03.
வீடு
---------
சப்பாத்தை களற்றி விட்டு
உள் நுழைகிறேன்
நகர்ந்து செல்கிறது வீடு
செருப்பிழந்த கால்களோடு
வீட்டை பின் தொடர்கிறேன்
ஒரு கோப்பையின் அடிச் சொட்டு தேநீரின் கசப்பினுள்
மூழ்கிய வீடு
கசப்பான காய்கள் காய்க்கும்
மரமாக வளர்ந்து நிற்கிறது
செருப்பை களற்றிவிட்ட இடத்தில்
வீட்டின் கதவுகள்
இருந்ததாக ஞாபகம்
திரும்பி வருகிறேன்
சிறகு முளைத்த சப்பாத்துகள்
கூடுகட்ட பழகிக்கொண்டிருந்தது
04.
கொடுக்கு நீர்
-------------------
செத்த அகாலம்
அழுக்கு போர்வை உள் வியர்க்கும்
நிர்வான இரவு
ஈரமூறிய சிவப்பு விளக்கின்
மெல் ஒளியில் நிழல் தின்று நீர் விழுந்து நெளிகிறது நச்சு பாம்புகள் யோனி உள்
போதி மரங்கள் சரிந்து
மண் கெளவின
குறி விறைத்த குதிரையின் பசி தீர்ந்து
பிணி வந்து அழுந்தி செத்தன
போதி மர உளுத்த கிளை ஒன்றில்
குந்தி அமர்ந்து சீலை அவிழ்க்கிறாள்
விலை மாது ஒருத்தி
புழுத்த அவள் யோனி உள் கொம்பு உயர்த்தின கருந் தேள்கள்
காளான்கள் உள் நசுங்கி நாறின
ஆண் உறைக்குள் குழந்தைகள் வளர்ந்தன
யோனி தின்ற எறும்பின் பச்சையம் கருகி
பிணியோடு வாழ்கிறது நிலா..
வெள்ளி பிஞ்சுகளில்
நோய் குறி கண்டு செத்தன
முது மரமும் முளை செடிகளும்..!!
( இக் கலவியில வழியும் சொட்டு ஈரமும்
விஷ தேள்களின் கொடுக்கு நீர்தான்)
- ஸமான்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2013-11-25