ஒரு குடிமகனின் தீர்மானம்!..தமது முயற்சி வென்றிடுவீர்
01.
ஒரு குடிமகனின் தீர்மானம்!
----------------------------------------
செத்துச் செத்து வாழ்வதைநான் விட்டுவிட்டேன் -இனிச்
சீவனுடன் வாழ்வதற்குக் கற்றுவிட்டேன்!
புத்திகெட்ட செயல்களையும் விட்டு விட்டேன்!` -இனிப்
புதுவாழ்வு வாழ்வதெனத் துணிந்து விட்டேன்!
முத்து முத்துக் குழந்தைகளின் முகம்நினைத்தேன் -அவர்
முகம்தொலைத்த சிரிப்புகளுக்கு இனியுழைப்பேன்!
சக்திகெட்டு வாழ்வதுவும் வாழ்க்கையில்லை -பலர்
சக்திபெற நானுழைப்பேன்! தாழ்வுமில்லை!
ஆசையெனும் மயக்கினிலே அமிழ்ந்துவிடேன்! -வெட்டி
அரசியலில் குரல்கொடுத்துத் தவழ்ந்துகெடேன்!
கூசியினி இலவயங்கள் மறுத்திடுவேன்! -நாட்டைக்
கூறுகட்டி விற்பவரை வெறுத்திடுவேன்!
மொழிசாதி மதம்,இனத்தை மறுத்திடுவேன்! -தேச
முன்னேற்றம் தடுப்பவரை அறுத்திடுவேன்!
விழிமூடிப் பலபொறுத்த நிலைவிடுத்தேன்! -எந்த
வேலையிலும் ஊழலறத் தலையெடுத்தேன்!
மத்தளம்போல் அடிவாங்கி அழுதவொலி -இனி
மாறிவிடும்! புதுராகம் எழுந்ததடி!
வாழ்ந்தநடை மாற்றியிதோ எழுந்துவிட்டேன்! -பூமி
வாழ்த்துமொலிப் பட்டாசாய் முழங்குதடி!
02.
தமது முயற்சி வென்றிடுவீர் !
--------------------------------------------
ஓடும் நதியும் சிரிப்பானால்
உள்ளத் துள்ளே ஒடுங்கிடுமோ?
தேடும் எதுவும் கைவந்தால்
தேக்கம் நெஞ்சில் வந்திடுமோ?
கூடும் நட்பை விரும்பிடுவோர்
கொடுத்து வாழ மறுப்பாரோ?
நாடும் உனதாய் நினைப்பாயேல்
நலிவு செய்வோர் பொறுப்பாயோ?
உள்ளும் புறமும் சிரித்திடுவீர்!
உறுத்தும் கவலை மறந்திடுவீர் !
எள்ளும் கொள்ளும் முகத்தினிலே
எதற்கு வெடிக்க விட்டிடுவீர்!
தள்ளும் முள்ளும் வாழ்க்கைதான்!
தள்ளும் கோப முள்ளினையே!
வெள்ளத் தோடே செல்லாமல்
விலகி நீந்தக் கற்றிடுவீர்!
எள்ளும் வாய்கள் மூடிவிடும்!
எதிர்ப்பும் தானே ஓடிவிடும்!
கள்ளும், கழிவி ரக்கமதும்
கவலை கூட்டும் அழித்துவிடும்!
வெள்ளை மனத்துக் குழந்தைகளை
விரும்பி உம்முள் நினைத்திடுவீர்!
தள்ளிப் போகும் தடைகளுமே!
தமது முயற்சி வென்றிடுவீர் !
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2012-07-04