ஜிகாத்
எல்லாவற்றையும்
நான் கவனித்துக் கொண்டுதானிருக்கிறேன்
உன் ஒவ்வொரு அசைவையும்
நான் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்
டிசம்பர் ஆறாம் தேதியிலிருந்து
வெள்ளப் பெருக்கில் மிதந்துவரும்
பிணங்களை
கண்ணீர் ததும்பும் விழிகளோடு
இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறேன்
யார் அடியெடுத்து வைத்தாலும்
மனிதர்கள் மனிதர்களாக
மாறப்போவதில்லை
வைக்கப்படும் ஒவ்வொரு காலடியும்
கற்களாகவும் வெறியர்களாகவும்
மாறுவதை
நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்
என் பசித்த வயிற்றுக்கும்
என் ஒருபிடி சோற்றுக்கும் இடையில் நின்ற
அல்கபீர் கேரோ,
ஹீப்ளி ஈதாக் மைதானத்தில்
திரிசூலத்தைப் போலப் பாய்ந்து நின்ற
அந்தக் கொடிமரம்,
என் சாணக்கிய மூளைக்கும் கீழே
நொறுங்கிய மதுரா
எல்லாவற்றையும் நான்
கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
இந்தி வாரம் என் வீட்டிற்கு வந்த
ஒளிவிளக்கு என்று நினைத்தேன்
ராஜீவம் என் மரபின்
நறுமணம் என்று நினைத்தேன்
அவற்றை என் தலையால் தாங்கினேன்
என் கனவு மலர்களின் மீது
நடந்த பிறகு
என் பைஜாமாவைத் திறந்து
என் மதநம்பிக்கையை
பார்த்த பிறகு
நீங்களும் மாறினீர்கள்
வாமனின் காலடியாக
கொடூரமாக
என்னை வெட்டிய பிறகு
என் இரத்தத்தால் திலகமிட்ட பிறகு
காகிதப்பூ குடியுரிமையுடன் மட்டும்
நான் எஞ்சி நிற்கிறேன்
இடிப்பதற்கு எதுவுமே இல்லாமல்
நீங்கள் எரிச்சலடைந்திருக்கலாம்
பொறுமையிழந்திருக்கலாம்
உங்கள் கழுகுக் கண்கள்
ஒருமுறை நோட்டம் விடட்டும்
எங்கள் பைத்தியக்காரப் பாட்டன் ஒருவன்
எங்கள் பாட்டியின்மீது
கொண்ட காதலை
பால்நுரையாக மாற்றிக் கட்டிய
அந்த நிலவொளி மாளிகை
யமுனைக் கரையின் ஓரத்தில்
இன்னமும் இருக்கத்தான் செய்கிறது
தில்லியின் மேட்டில்
கிழக்கு வானத்தைத் துண்டித்து
வைத்தது போலவும்
இரத்தத்தைப் பூசிக் கொண்டது போலவும்
இருக்கிறது அந்தக் கோட்டை.
உன் மதவெறிக்கு
இன்னும் இருக்கிறது தீனி
குதுப்மினார், சார்மினார்
புலாந்த், தர்வார், ஜீம்மா மசூதி
மெக்கா மசூதி, மகாராஜா அரண்மனை
அனைத்தும் என் சுவடுகள்.
இடித்துக்கொண்டே இரு
நீ இடித்தபோதும் சரி
தொண்டைகளை அறுத்தபோதும் சரி
கேள்விகளே இல்லை
ஆனால் நீங்கள்
நாட்டைப் பிளந்து
கிராமங்களில் வளர்ப்பது மிருகங்களை.
என்னால் தாங்க முடியவில்லை
பிணத்தைப் புணர்ந்து பிழைக்கும்
உனக்கு
ஊயிர்த்தெழ வைக்க
பிணங்கள் தேவையென்றால்
இனி தவிர்க்க முடியாது
விழும் முதல் பிணம்
உன்னுடையதாகத்தான் இருக்கும்.
- காஜா (புதிய கையெழுத்து: தற்கால தெலுங்குக் கவிதைகள் தொகுப்பு)
- காஜா 1969 இல் பிறந்தவர். பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராக பணிபுரிபவர்.
- காஜா
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2004-04-30