மௌன ஆயுதம்
--------------------------
நன்கு பழுப்பேற்றி
துல்லியமாய்க் கூர்தீட்டி
குறிப்பிட்ட இலக்கோடு
வீசியெறியப்படுகிறதுன்
கொச்சைச் சொற்கள்.
என்னை இரணப்படுத்தவே
தயாரிக்கப்பட்ட அவைகளை
குணப்படுத்தும்
குடும்ப மருத்துவச்சி நான்
தொடர்ந்தியங்கி
உன்னுடன் சுமூகமாய் வாழ்வு பகிர
வீசியெறிந்த சொற்கள்
வெட்கியழுது
தூக்கில் தொங்குகின்றன
வீடெங்கிலும் மாயப் பிணமாய்
எதிரியென போரிடவா
இந்த வாழ்க்கை?
கனத்த மௌனம்
அதிர்வற்ற அலட்சியம்
வேறொன்றுமில்லை எனக்காயுதம்
புன்னகைத்துக் கொண்டே
உன்னை படுகுழியில் வீழ்த்த..
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-05-15