தாய்ப் பூ
---------------
கண்டுகொள்ளப் படாத
ஒரு கொய்யாப் பூவாய்
ஒரு பிஞ்சாக
ஒரு காயாக
என்னை ஒட்டி வளர்த்தாய்
வௌவால்கள் வட்டமடிக்கும்
ஒரு மரத்தின்
ஒரு மூலையில்
இலை மறைவில்
எனை விளைவித்தாய்
அணில் கொறித்துத் தின்னும்
ஒரு கனிந்த நாளில்
கமழும் வாசனையில்
பல கண்கள் நமைப் பார்க்க
அப்போதும்
ஒரு கொய்யாக் கனியின்
தொப்புள் உருவாய்
தாய்ப் பூவே
நீயும் ஒட்டியேயிரு
என்னை.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-03-23