சிவனொளிபாத மலை
-------------
மாதமது மார்கழியில் மதியின் வட்டம்
. . வானத்தில் தோன்றிடவும் மக்கள் கூட்டம்
பேதங்கள் இல்லாது பெரிய தூரம்
. . பேசாமல் பிதற்றாமல் கடந்து வந்து
நாதங்கள் இசைத்துநன்றே உயர்ந்து நிற்கும்
. . நானவித மரங்களின் நடுவே அங்கு
பாதங்கள் நடைபோடும் உச்சி நோக்கி
. . படியளத்தோன் இட்டுவைத்த பாதம் பார்க்க
தயவுசெய்யும் நோக்கத்தில் படிகள் கட்டி
. . சங்கடத்தில் ஏறுவோர்க்கு வேலி போட்டு
பயணிக்கும் போதினிலே உரசும் காற்றும்
. . பயமில்லா இருட்டுமந்தச் சூழல் தன்னில்
உயரமில்லா செயற்கையில் இட்டு வைத்த
. . ஒளிக்கோடு மேல்நோக்கி உயர்ந்து செல்ல
வயதுவந்தோர் வெள்ளாடை தரித்துக் கொண்டு
. . மனம்மகிழ பக்திஇசை பாடிச் செல்வார்
விடிகின்ற நேரத்தில் உச்சி எட்ட
. . மெல்லிசைத்து வரவுசொல்லும் புள்ளினங்கள்
கொடிகளிலே பூத்துவிட்ட மலர்களாலே
. . கூடிவரும் நறுமணமும் மயக்கம் செய்யும்
அடியதனைக் காணுகின்ற எண்ணத்தாலே
. . ஆட்டுவிக்கும் களைப்பெல்லாம் ஓடிச் செல்லும்
துடிதுடிக்கும் மனிதனது உள்ளம் அங்கே
. . தூயவனின் அடையாளம் எண்ணுற்றாலே
ஒளிபடர்ந்த உச்சியினை அடைந்த போது
. . ஒப்பில்லா உவகைவந்து உடலில் ஒட்ட
நௌ¤வில்லா நீண்டதொரு வரிசை நின்று
. . நீசமில்லா இறைவனவன் இட்டு விட்ட
தௌ¤வான பாதஅடை யாளம் கண்டு
. . சிறப்பான அருளத்னைப் பெற்ற வேளை
களிக்கின்ற மனதைத்தான் எடுத்துச் சொல்ல
. . காணவில்லை சொற்களென்று நொந்து கொள்ளும்
ஆண்டவனின் அருளதனைக் கண்ணுற் றுப்பின்
. . அங்குதிக்கும் கதிரவனின் உதயம் காண
வேண்டாத குளிரதையும் தாங்கிக் கொண்டு
. . விடியலுக்குத் கூடுகளும் காத்து நிற்கும்
தீண்டுகின்ற ஒளிக்கீற்று கிழக்கில் எட்ட
. . தீயாத எழிலங்கு தோன்றி நிற்க
*கூண்டிற்கு முழுவட்டம் ஒளியைக் காட்ட
. . கூச்சத்தில் கண்களெல்லாம் மூடிக் கொள்ளும்
பகலவனின் பாச்சுமது வெளிச்ச வெள்ளம்
. . பரிணாமக் காட்டலிலே கடலும் ஆறும்
அகலமான பொருப்புகளில் எழில் *தே தோட்டம்
. . அதையடுத்துப் பாய்கின்ற நீண்ட ஆறு
நிகழ்கால சரித்திரத்தில் எழில் கொஞ்சும்
. . நீங்காத நினைவுகளாய் ஊன்றி நிற்கும்
நுகவோர்கள் நொடியினிலே கூடிச் செல்லும்
. . நொடியாத அருளுடனே அழகுச் செல்வம்
இறைநோக்கும் இயற்கையும் வதனம் செய்ய
. . ஏறுவோர் யாவரையும் ஈர்த்து நிற்க
நிறைவான எழிலங்கு வண்ணம் காட்டும்
. . நேரத்தில் உணர்வுகளும் ஒத்துப் பாடும்
குறைவில்லாப் பயணமங்கு இறங்கி னாலும்
. . கூடிவிட்ட எழிற்கொள்ளை இன்னும் கூட்டும்
மறைந்திருந்த மலைக்காட்சி கண்ணில் பட்டு
. . மயக்கத்தில் தம்மையே இழக்கச் செய்யும்
குறிப்புகள்
------------------------
சிவனொளிபாத மலை - எல்லா மதத்தினரும் தங்கள் இறைவன் பாதம் பட்ட இடமாகப் போற்றும் சிறப்புப் பெற்ற மலை இங்கு குறித்த தினங்களில் நள்ளிரவில் மலையேறி உச்சியில் அமைந்த ஆண்டவன் பாதமும் கதிரவன் உதயமும் காண்போர் எண்ணில் அடங்கா ( ஏறுவோரில் உள்நட்டார் , வெளிநாட்டார் என எல்லா மதத்தினரும் அடங்கும் )
கூண்டு - பூமிக் கூண்டு
பொருப்பு - மலை
தே - தேயிலைத் தோட்டம்
அன்புடன்
அவதானி கஜன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01