திக்கெட்டும் ஒலிக்கட்டும் தமிழன்னையின் திருப்புகழ்.. திக்கெட்டும் ஒலிக்கட்டும் தேமதுரத் தமிழோசை..தெய்வத் தாரகை
01.
திக்கெட்டும் ஒலிக்கட்டும் தமிழன்னையின் திருப்புகழ்
------------------------------------------------------------------------
அந்நிய மொழியின் ஆக்கிரமிப்புகளையும்
ஆங்கில மொழி நிகழ்த்திய
ஆழிப்பேரலைத் தாக்குதலால் உண்டான
நிலைகுலைந்த தன்மையையும்
அஞ்சாமல் எதிர்கொண்டு
மலைபோன்ற நெஞ்சுறுதியுடனும்
எல்லையிலாப் பொறுமையுடனும்
பேரிடி, பெருமழை வெள்ளம் தாங்கி
வைராக்கியம் கொண்டவளாய்
நிமிர்ந்து நின்றாள் எங்கள் தமிழன்னை
‘பேரிலக்கியச் சபைகளி்ல்
தலை கவிழ்ந்து நிற்கும் நிலையை
தமிழ்ச்சான்றோர் தருவதில்லை
எக்காலத்திலும் தமக்கு
வரகவிகள் தமிழ்வயலில்
விளையாமல் போக
தமிழ்மொழியொன்றும் தரிசு
நிலமல்ல இது உறுதி’- என
பெருமிதம் பொங்கச் சொல்லி
சிரசில் மணிமகுடமும்,
கழுத்ததில் மணிமாலையும் சூடி
கம்பீர தோற்றம் கொண்டவளாய்
பாரெங்கும் ரதத்தினிலே பவனி வந்தாள்
எங்கள் தமிழன்னை
பிரளத்தில் நகரம்தான்
கடலுக்குள் மூழ்கும்
தமிழ்க்கடலின் எழுச்சியினால்
ஏழு கண்டங்களும்
அதனிடத்தில் சிறைபட்டுப் போகும்
கம்பன் இயற்றிய ‘கவி’ மாலையும்
பாரதி பாடிய ‘பா’ மாலையும்
வள்ளுவன் வடித்த ‘குறள்’ மாலையும்
இயம்பிடுமே உலகுக்கு
இயற்றமிழின் சிறப்பு
இன்னதென்று
சர்க்கரைப் பாகும், தேனும்
அதனதன் இயல்பினில் ஒன்றாகுமா?
சர்க்கரை உடலுக்கு கேடு
தேன் உயிர்காக்கும் அருமருந்து
தமிழ்த்தேனை அள்ளிப் பருகிடுவோம்
அதன் இனிமையால் நல்வளம் பெருகி
இல்லறம் சிறக்க
இன்புற்று வாழ்வாங்கு வாழ்ந்திடுவோம்!
02.
திக்கெட்டும் ஒலிக்கட்டும் தேமதுரத் தமிழோசை
----------------------------------------------------------------
சொற்கள் தீயை கக்கின
அதைப் படித்தவர்கள் உள்ளம்
விம்மி அடங்கின
கலைத்தாயின் மகுடத்தில் வைரக்கல்லானான்
தமிழ்த்தாயின் தவப்புதல்வர்களில்
தங்கமகனானான்
வறுமையின் கோரப்பிடி
வாழ்விலோ பசி, பிணி
சுற்றத்தினரின் கேலிச்சிரிப்பொலி
உள்ளத்திலோ, பரங்கியர்களால்
நயவஞ்சகமாக பந்தாடப்பட்டதனால்
உண்டான வலி
சிறைக்கதவுகளால் அவனது சிந்தனையை
சிறைப்படுத்த இயலவில்லை
அவனது சுதந்திர தாகம் மட்டும்
இறுதி வரை தணியவே இல்லை
முறுக்கு மீசை கொண்டவன்
முத்தமிழையும் ஆகாய கங்கையென
தமிழ் மண்ணெங்கும் பாய்ந்தோடச் செய்தான்
முண்டாசு அணிந்தவன்
ருத்ர தாண்டவமாடினான், கவிநாதனாக
விடுதலை எழுச்சியை தேசத்தில் தோற்றுவிக்க
மேற்கொண்ட பெரும் முயற்சிகளில்
அவனே வித்தானான்
அந்த விதை அழிந்த பின்பு தான்
புரட்சி முளைவிட்டு விருட்சமாய்
எழுந்து நின்றது
காணி நிலம் அவன் கேட்ட போது
கொடுக்கவில்லை பராசக்தி
இன்று தமிழ் மண்ணெங்கும் பரவிக்கிடக்கின்றது
அவனது உயிர்சக்தி
ஆழிப்பேரலையை
நேரில் கண்டுவிட்ட நாமனைவரும்
அஞ்சிநடுங்குகிறோம், அல்லல்படுகின்றோம்
அன்று செந்தமிழ்ச்சுனாமி மானிடனாய்
வாழ்ந்து காவியங்கள் பல படைத்து
பின்பொரு நாள் மத்திம வயதிலேயே
மாயமானதை
காலச்சுவடுகள் மூலம் அறிகிறோம்
கோயில் யானை பாரதியின் தேகத்தை
தனது துதிக்கையால் வீழ்த்தியது
கருவறையில் சயனத்திலிருந்த பார்த்தசாரதி,
கோயிலுக்கு உள்ளிருந்து ஓடோடி வந்தானய்யா
குவளைக் கண்ணனாய்
மகாகவிஞனை தனது தோளில்
சுமந்தானய்யா
யானை அறியாமல் செய்த பிழைக்கு
பரிகாரம் செய்தானய்யா
பார்த்தனுக்கு மட்டுமல்ல
பாரதிக்கும் தானொரு சாரதி - என்று
அன்று நிரூபித்துச் சென்றானய்யா
அவன் பிராணன் அடங்கிய போது
சடலத்தைச் சுமந்து மாயனம் நோக்கிச் சென்ற
இறுதி ஊர்வலத்தில்
விரல்விட்டு எண்ணக்கூடிய மிகச்சிலருடன்
இடுகாடு வரை தமிழன்னை வந்தாள்
தனக்காக வாழ்ந்தவனுக்கு
வாழ்த்தி விடைகொடுக்க....
03.
தெய்வத் தாரகை
-------------------------------
எங்கெங்கு தேடிடினும்
பாவை, உன் போல வருமோ
திக்கெற்று அலைகையில்
நிழல் கொஞ்சம் தருமோ?
வாடி நின்ற போது
கலைகளால் ஞானத்தாகம் தீர்த்தாய்
கலங்கி நின்ற போது
ஆதரவாய் கை கொடுத்தாய்
வீழ்ந்து கிடந்த போது
நம்பிக்கை கொடுத்து மீண்டும்
உயிர்கொடுத்தாய்
எனை தொலைத்து அலைந்த போது
இம்மண்ணில் எனக்கோர்
முகவரி கொடுத்தாய்
அவமானங்கள் உள்ளத்தை நொறுக்கிய போது
உனது வார்த்தைகளின் ஈரம்
அதனை ஒட்டவைத்தது
காலம் கொடுத்த காயங்களுக்கெல்லாம்
மருந்தாய் நீ இருந்து,
எனையொரு மனிதனாய் உருவாக்கினாய்
உதாசீனப்படுத்துபவர்களை அலட்சியப்படுத்தி
லட்சியத்தை நோக்கி முன்னேறச் சொன்னாய்
‘முயற்சிகளே முடிவுபெறாத வெற்றிகள்’
என்று நெஞசத்தில் பதிய வைத்தாய்
‘மழைநீருக்கு வாய்க்கால்கள் வெட்டப்படுவதில்லை
பறவைகளுக்கு கலங்கரை விளக்கம்
அமைக்கப்படுவதில்லை
விதைக்கு எப்படி முளைவிட வேண்டுமென்று
யாரும் பாடம் நடத்துவதில்லை’-
என்று ஊக்கம் கொடுத்து உறுதுணையாய் நின்றாய்
முயற்சி எனும் துடுப்பை வளித்து
வாழ்க்கைக் கடலை
துணிந்து கடக்க முனைந்தபோது
உருவமிழந்து ஞானச்சுடராய்
எனதுள்ளத்தில் நீ கலந்தாய்
நித்தமும், என் குரல் வானம் எட்டும் வரை
உரக்கச் சத்தமிட்டுக் கேட்கின்றேன்
நீ வறியவர் தேடும் செல்வமோ
குடும்பஸ்தன் ஏங்கும் மன நிம்மதியோ
கூண்டுக்கிளியின் வானவெளியோ
முதி்ர்கன்னியின் திருமணக் கனவோ
மரங்கள் வேண்டி நிற்கும் மழையோ
ராமனின் பேராண்மையோ
சீதையின் பொன் எழிலோ
பாஞ்சாலியின் அவிழ்ந்த கூந்தலோ
பெண் உருவில் இம்மண்ணில் வந்து உலாவும்
விண்ணவளோ?
விண்ணவளோ?
விண்ணவளோ?
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-12-10