இரு பதிவுகள்
--------------
மதியழகன் சுப்பையா மும்பை
*
இடது கையில்
காய்ந்த
சளியின் கோடு
காதுக்குள்
காய்ந்திருக்கும்
சோப்பு நுரை
கன்னமெல்லாம்
திட்டுத்திட்டாய்
அழுக்கு
புடைத்த வயிறு
சீப்புக்கு அடங்காத மயிர்
காலெல்லாம்
செம்மண்ணால்
உலக வரைபடம்
மயிர் சார்ந்த
இடங்களிலெல்லாம்
உவர்ப்புச் சுவை
மூக்கெல்லாம்
காய்ந்த பீ
எப்படி இருப்பினும்
அந்தியில் வரும் ஆத்தா
'என் ராசா' என்று
முத்தமிடுவாள்
ஆத்தா பார்த்திருபாளோ ராசாவை?
#
காலில் கருங்கல்
ஏற்படுத்திய காயம்
கரண பிடிச்சிருந்தது
உள்ளங்கையெல்லாம்
உதிராத காய்ப்பு
பத்த வச்சாலும்
பத்திக்காத பரட்டத்தலை
கருத்து சுருங்கிய
உடம்பு
தோளெலும்பு மட்டும்
தூக்கியிருக்கும்
சோப்பின் முகம்
கண்டதில்லை
இடுப்பு வேட்டி
நிமிர்ந்து நடந்தா
நெஞ்சு வலிக்கும்
குத்த வச்சுதான்
கஞ்சியே குடிப்பேன்
படுத்து கிடந்தா
பல்லு தெரியும்
எப்படி இருப்பினும்
என் பொஞ்சாதி
'மவராசன்னு'
மடியில கிடத்துவா
பொஞ்சாதியாவது
பார்திருப்பாளா
மவராசன?
madhiyalagan@rediffmail.com
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01