நவீனள்.. பூட்டுகளும் சாவிகளும்
01.
நவீனள்
------------
தன்னில் தொலைந்த
ஆணைப் பற்றி
அவள் அறிந்தே இருக்கிறாள்...
தொலையாத பெண்ணின்
குறிப்புக்களை அவள்
வாசித்தபடியே இருக்கிறாள்...
வார்த்தைகளின் பின்வாசல்களை
அடைத்தே இருக்கிறாள்...
தொலையாததைக் கொண்டு
தொலைந்ததைத் தேட
அவள் என்றுமே
முயன்றதில்லை...
ஈர்ப்பு விசை விதிகளை
அவள் சரிபார்த்ததில்லை...
ஊராரின் முன் நடக்கையில்
செவிகளை அடைக்க
அவள் என்றுமே மறப்பதில்லை..
02.
பூட்டுகளும் சாவிகளும்
---------------------------------
உணர்வுகளுடன் நடைபழகுகையில்
நட்பின் கதவுகள்
அவசரமாய் தட்டப்பட்டு
விடுகின்றன...
மனப்பூட்டுகளைப் பொறுத்தே
சாவிகள் அமையும்
என்பது நிதர்சனம்...
எல்லா பூட்டுகளுக்குமான
சாவிகள் ஒன்றாகவே
இருக்கவேண்டுமென்பதில்லை...
ஆயினும், கள்ள சாவிகளை
அதிகமாய்க் கள்வர்களிடமே
எதிர்பார்க்கலாம்...
சில நேரங்களில்
சாவிகளுக்கும் பூட்டுக்கள்
தேவைப்படவே செய்கின்றன...
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-05-02