எப்படி வரும்.. அது வந்தபோது
01.
எப்படி வரும்...
------------------
அணியும் ஆபரணங்களை
அகற்றிவிடுகிறோம்,
பகல் முடிந்து இரவில்
இன்துயில் செல்லுமுன்னே...
அகங்காரத்தையும்
அகத்தை அழிக்கும்
கவலைகளையும்
கழற்றி வைக்காமல்
கட்டிலுக்குப் போகிறாயே-
எப்படி வரும்
இனிய தூக்கம்...!
02.
அது வந்தபோது...
-------------------
வானவில் வந்து
வண்ணக் குடைபிடித்தது
வையகத்திற்கு-
வர்ணிக்கிறான் கவிஞன்...
ஏக்கத்துடன்
எட்டிப்பார்க்கிறான் விவசாயி-
வந்த மழையும் போச்சுதே..
நொந்துகொள்கிறான்...!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-01-13