ஆளுமை
-------------
வாழ்ந்த பிறகும்
பிடிபடாத வாழ்க்கை போல
தோற்றமும் மாற்றத்தின் காரணமும்
புலனாகாத காற்றே!
எங்கும் நிறைந்த
நீயும் கடவுள்தான்!
உயிர் வாழ்தலும் வீழ்தலும்
உன் கையில்தான்!
மென்மையாய் வன்மையாய்
உன் திறன் உணரச் செய்வாய் நீ!
எளியோராயினும் ஏழையர்
குடிலில் இயல்பாய்ப் போய் வருவாய்
பிரதிப்பலனும் பேதமும் அறியாய்!
வாழ்விக்கும் கர்வம் இன்றி -
புகழும் தேடாது-
பாகுபாடில்லாத இயற்கையே...
வெறுப்புடன் கதவடைப்போர்
மீதும் விருப்பம் கொண்டு
உள் நுழைந்து சென்று பார்ப்பாய்.
உன் தேவையில்லாப்
பொருளையும் கூடத்
தொட்டுச் சென்று
அன்பைச் சொல்வாய் நீ!
ஆட்சி செய்யாத
அதிகாரம் காட்டாத
ஆளுமையே...
தலை வணங்கிக் கேட்கிறோம்...
கற்றுக் கொடு இந்தத் தகைமையை!!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-12-15