பூக்களைப் புறக்கணிக்காதீர்கள்!
----------------------------------
பெற்றவள் விற்றா விட்டாள்
சொல்கிறார்கள் குற்றமாய்
ஆயினும் எவருக்கும்
தெரியவில்லை சரியாய்
தொற்றிக் கொள்ளத்
தோள் தேடிக் கிளியே
கேள்விக் குறியாக நீ!
கத்தை கத்தையாய் கண்ணே
நோட்டுக்களைக் கைமாற்றி
நோகாமல் உனைக் கையாளத்
தூக்கத்துக்கும் மருந்தளித்து விட
தோள்கள் துவண்டு போய்
தொங்கி விழும் தலையுடன்
தூண்டிலில் சிக்கிய மீனாய் நீ!
தயக்கமே இல்லாமல்
தடயங்களை மறைத்துத்
தகவல்களையும் இடம் மாற்றி
தடுமாற்றமே இல்லாமல்
தந்திரமாய் விலை பேசும்
தரகர் கும்பல் இவர்கைகளிலே
தத்தளித்திடும் தளிரே - உண்மையிலே
'தத்து' அளித்திடத்தான்
தரப் பட்டாயா நீ ?
கலி என்பது இதுதானோ
கற்றவரும் துணையாமே!
காலம் எங்கே செல்கிறதென
கலக்கம் சூழுதிங்கே கலைமானே
கவலை அறியாது நீ!
கொடுமை கண்டு அடங்கவில்லை
கொந்தளிப்பு இங்கெமக்கு
சந்தையிலே விற்கின்ற
கொத்தவரங்காயா நீ ?
மருத்துவமனை வளாகத்திலேயே
மனசாட்சியற்ற சிசு ஏலமாம்
மாசற்ற மலரே-ஏதும் புரியாமல்
மருந்து மயக்கத்தில் நீ!
காவலரால் மீட்கப் பட்டு
கரை சேர்ந்ததாயென செய்தி
ஊடகங்கள் உறுதி செய்ததும்தான்
உறக்கம் வந்தது எமக்கு
நிறைவாய் ஒரு
வாக்கியம் உனக்கு
இனியேனும் இனிதாய்
வாழ்ந்திடுக நீ!
குற்ற உணர்வென்பது
கொஞசமும் இன்றிக்
குப்பைத் தொட்டியிலும்
இடுகாட்டு வாசலிலும் கூட
இட்டுச் செல்கிறாராமே உனைப்
போன்றப் பல பூஞ்சிட்டுக்களை
விடிகின்ற காலையோடு
விடிந்து விடும் உம்வாழ்வுமென
விட்டிடலாம் கவலைதனை
எவரேனும் கண்டெடுத்துக்
கரை சேர்ப்பாரென-
இரை தேடி இரவெல்லாம்
சுற்றி வரும் நாய்களிடம்
மாட்டி மடிய நேர்ந்தால்
என்னவாகும் எனும்
பின்விளைவுகளைப் பற்றிய
சிந்தனை சிறிதுமின்றி...!
எட்டி யோசிக்கட்டும்
பூக்கள் உம்மைப்
புறக்கணிக்கும் செடிகள்.
ஆம் சில செடிகளுக்கு
பல கொடிகளுக்கு
பூக்களுடனான பந்தம்
தொடர்ந்திடக் கொடுத்து
வைப்பதில்லைதான்.
வறுமை முதல் வெறுமைவரை
வெவ்வேறு காரணங்களால்
அடித்து வீசும் காற்றாகவும்
சுழன்று வீசும் புயலாகவும்
வாழ்க்கையை விளையாடிவிட்ட
விதியின் சதியினால்
துளிர்க்கின்ற தளிர்களைத்
தம்மோடு வைத்துக்
கொள்ள வழியற்ற-
அச்செடிகொடிகள்
அரசுத் தொட்டிலிலோ
ஆதரவற்றோர் இல்லத்திலோ
உம்மை உதிர்த்துச் சென்றால்-
தத்தெடுக்கக் காத்திருப்போர் வசம்
சட்டப்படி ஒப்படைக்கப்பட்டு
வாழ்வாங்கு வாழ்ந்திடத்தான்
வழிவகை பிறந்திடுமே.
http://tamilamudam.blogspot.com
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-06-01