முனை 1:
அடர்த்தியான வயல்.
எட்டித் தொடலாம் தண்ணீர்
கண்ணாடிக் கிணறு.
சுரக்குடுகை நீச்சல்.
திருட்டு மாங்காய்.
குருவிகள்
அவை பறக்க வானம்
நீலமாய் நீளமாய்.
குண்டுக் குண்டாய் மேகங்கள்.
ஓய்ந்த மழை.
நனைந்த பூக்கள்.
ஒதுங்கிய கூரைக்கடையில்
தேநீர்
சூடாய் கொஞ்சம் கசப்பாய்.
எல்லாம் பற்றி
எழுதத்தான் ஆசை
எனக்கும்.
ooo
முனை 2:
உறைந்த ரத்தம்.
சிதறிக் காய்ந்த
உறுப்புகள்.
குவியலாய் பிணங்கள்,
காங்க்ரீட்டுகள்.
டாங்கிகள் நசுக்கிய
விளக்குக் கம்பங்கள்.
எறிந்து கூடாய் நிற்கும்
பேருந்துகள் ரயில்கள்.
காலிழந்த பிஞ்சுகள்.
கன்னி வெடிகள்
இன்னும் வெடிக்காமல்
தாகத்தோடு.
ரொட்டிக்கும்
மருந்துக்குமான
நாய்ச்சண்டைகள்
வந்தவன் நகைக்க.
அழித்து அழித்து
மீண்டும் வரையப்படும்
கோடுகள்.
நாளைக்காவது விடியும்
என்று தூங்கச் செல்லும்
கண்கள்.
எழுதத்தான் ஆசை
எல்லாம் பற்றி.
-- வினோபா
- வினோபா
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01