பயணங்கள் முடியட்டும்
----------------------------
இரு பத்து வருடங்கள்
முன்னாலே...
சேறு மிதித்து
ஏறிய கப்பலும்
கொட்டும் மழையில்
நனைந்து போன
என் புட்டுப் பொட்டலமும்
நூற்றில் ஒன்றாய்
பாம்பு பயத்தி;ல்
அத்தையொடு ஒட்டிப்படுத்த
பழையதொரு மண்டபமும்
நீண்டதொரு கடல் பயணமும்...
நான் முதலில்
இருக்க மறுத்த
மண்குடிசையும்...
ஒற்றைத் தண்டவாளம்
பக்கமாய் நின்ற ஒற்றை மரமும்
குத்தித் தின்ற
பழத்தின் விதையும்
எனக்கே எனக்காய் இருந்த
அந்த நீலச் சட்டையும்
பச்சைப் பாவாடையும்
பெரிய மீசையோடு
குடிசை வந்து போன
போலீஸ் மாமாவும்.
நினைவுகள் இன்னும்
தொலைக்கவில்லை.
பத்து பைசா இன்றி
வாங்காத பரீட்சைக்குத்தாளுக்கு
விழுந்த அறையும் -அந்த
தாமரைச்செல்வி ரீச்சரும்
சுற்றி இருந்த பக்கத்து
அன்ரி அங்கிள் எல்லாரும்
என்னை அகதி என்று சொன்னதையும்...
அப்பா சவுதியில்
என்றும் சொல்லும்
அம்மாவின் பச்சைப் பொய்களும்
அப்பாவின் மரணம் பற்றி
அறிந்த ராத்திரிப் பொழுதும்
கிணற்றுக்கட்டும்.
உண்மை சொன்ன
சிவப்புச் சட்டை சினேகிதியும்
இதயத்தில் விழுந்த அறையாய்
இன்னும் ஈரம் இருக்கிறது
அகத்திலும் புறத்திலும்.
சின்னதொரு மனசோர்விலும்
புடைத்துக் கொட்டும் மழையென
அத்தனை ஞாபகங்களும்
மெத்தென்ற இருக்கையில்
இன்றும்
முள்ளாய் குத்தும் நினைவுகள்..
பயணங்கள் முடியட்டுமே...
ஊரில் என் முற்றத்து ரோஜாவும்
பூக்கட்டுமே..
-கவிதா. நோர்வே
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-05-18
முகமிழந்து, அடையாளமிழந்து, பண்பாடு, காலச்சாரம், வாழ்க்கைநெறி, எதிர்காலக் கனவுகள், அத்தனையும் தனக்குள்ளே புதைத்து. புலம்பெயர்ந்த நாட்டில் அணிந்துகொண்ட முகத்திரையின் அடையாளமாய் கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றம் கொள்ளும் இனத்தில், அகதி வாழ்க்கையில் தன்னையே இழந்து கொண்டிருந்தாலும் அதன் வலியை, இழப்பை, வரலாற்றை, இழக்கை பதிவுசெய்ய எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் பாராட்டுக்குரியது. மண்ணையும் மக்களையும் சுவாசித்து அகதியாய் அடையாளமிழந்து, தங்கள் இருப்பை பதிவுசெய்ய முடியாமல் வலியோடு வெளிவரும் குரலின் தனித்து சாதிக்க முடியாத வார்த்தைகள், உணர்வுப்புலத்தில் சூல்கொண்ட மலராக செழித்து கவிதையாய் மலரும்போது வரலாறு படைக்கிறது.
சுற்றி இருந்த பக்கத்து
அன்ரி அங்கிள் எல்லாரும்
என்னை அகதி என்று சொன்னதையும்...
ஆகதி வாழ்வின் வலியை அழகாக பதிவுசெய்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.