முதுகுமுறிய பொதிசுமக்கும் ஒட்டகங்கள்
------------------------------------------
நாங்கள் பொதி சுமக்கும் ஒட்டகங்கள்
முதுகு முறிய பொதி சுமக்கும் ஒட்டகங்கள்
மூச்சிரைக்க இழுத்துச் செல்லும்
வண்டில் மாடுகள் போல்
நாங்கள்
முதுகுமுறிய பாரம் சுமக்க தயாராய் இருக்கிறோம்.
சாட்டையும் விரட்டும் இலாவகமும்
உங்களிடம் இருக்கும் வரை
நாமும் சுமந்துகொண்டே இருப்போம்.
செல்லும் தூரமோ,
பொதிகளின் அளவோ
எதைப் பற்றியும் நீங்கள்
கணக்கிடத் தேவையில்லை.
ஏனெனில் சுமக்கப் போவது நாங்கள்தானே.
ஓய்வு கிடைக்கும்போது அசைபோடவும்
நீர் கண்டபோது நிரப்பவும்
பாலைவனம் கடப்பதற்கு உம்மைச் சுமக்கவும்
நாங்கள் ஒட்டகங்கள் தயாராய் இருக்கிறோம்.
இன்னமும் வானம் பார்க்கும் கூரையும்
சில்லறை பொறுக்கும் கரங்களும்
கூடவே எங்களுடன்தான்.
என்றாலும் நீங்களும் நாங்களும்
சாப்பிடுவது ஒரு சாண் வயிற்றுக்குத்தானே.
-துவாரகன்
04092007
- துவாரகன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-05-05
பொதிகளின் அளவோ
எதைப் பற்றியும் நீங்கள்
கணக்கிடத் தேவையில்லை.
ஏனெனில் சுமக்கப் போவது நாங்கள்தானே!"
மனதை நெருடும் படியான மிக அற்புதமான கவிதை படைத்திருக்கிறார் துவாரகள். வாழ்த்துகள்!
by
அகரம்.அமுதா
நன்றி
துவாரகன்
10.05.2008