சமாதான பயணம்
-------------------------------
மனசில் பாரச்சிலுவைகளுடன்
உயிரின் இருப்புக்காய் குழந்தைகளின் பயணம்
மலைகளின் பெருவெளியில்
கபாலங்களையும் எலும்புத் துண்டங்களையும்
மிதித்து நடக்கிறார்கள்
தொலைந்து போன உறவுகளின்
சிவப்புக் கோடுகளை நெஞ்சில் சிலுவையாய் வரித்து
கரிக்கும் கண்ணீரைப் பருகி நடக்கிறார்கள்
அதர்ம ஒலி எழுப்பி கொடிய இரத்த வெறியை
ஆணிகளாலும், கோடரிகளாலும்; மன்னர்கள்
புண்படுத்திக் காட்டியிருக்கிறார்கள்
குழந்தைகள்
தங்கள் ஆத்மாக்களை
கல்வாரியின் மலைகளுக்கு ஒப்புக்கொடுத்துவிட்டு
மடிந்தது போக எஞ்சியவற்றுடன் நடக்கிறார்கள்
இப்போது
எல்லோருமே அழுகிறார்கள்
மன்னர்களால் கொல்லப்படுவதற்கு
இன்னும் எங்களிடம் உரிமைக்கான நியாயங்கள் இருக்கிறதா?
- விசித்ரா-
- விசித்ரா
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-02-10