வரலாற்று வாசிப்புகள்
பள்ளிக்கூடத்தில்
சிந்து சமவெளி நாகரீகத்தையும்
ஹரப்பா, மொஹஞ்சதாரோக்களையும்
வலுவிழந்த உடலோடும்
வளம் குன்றாத வசீகர குரலோடும்
வரலாற்றாசிரியர்கள்
புரிந்துணர்த்திய போது புரியவேயில்லை
வரலாற்றின் பழம்பெருமைகள்!
மாடுகளோடு மாடாகி
ஓடிக்கிடக்க வழிகோலிய
பனைமரங்களடர்ந்த
முட்கள்மிக்க ஓடையும்....
உயிர் குடிக்கும் உச்சிக் கதிரவனின் உக்கிரத்தில்
என்
நா வறண்டிருப்பதை பொருட்படுத்தாமல்
ஆவினங்களை அழைத்துச் சென்று
அதன் தாகம் தீர்த்திட எத்தனிக்கையில்
ஓரமாய் நீர் தேக்கி
ஈரப் பார்வையுடன் தான் உயிர்த்திருப்பதை
அறிவித்த குளமும்....
'ம்மா ' என்ற ஒற்றைச் சொல் பாடலின்
ராக சங்கமத்தில்
இசையின் மூலத்தை கற்ப்பித்து
தன் தேவை உணர்த்திய ஆவினங்களின்
ஆதிக்க பூமியாகிய
பச்சையாடை கட்டிய புற்சமவெளியும்...
இன்று
காணாமல் போய்
நினைவுகளின் ஒவ்வொரு
நியூரான்களையும்
செரிக்க செரிக்க
அரித்துக் கொண்டிருக்கும்
என்
இறந்தகால இன்பங்களின்
நிகழ்கால நிஜங்களை காணும்வரை!
-இளம்பூரணன் .அர
31/10/2007
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-11-04