மறையாத மகாத்மாக்கள்
(யாழினி அத்தன்)
தேசிய மகாத்மாக்கள்
சிரித்தபடி சிறை வைக்கப்பட்டார்கள்
காகிதங்களில்;
ரூபாயாக
டாலராக
ரூபிளாக
அந்தந்த நாட்டு
திறந்தவெளி
காகிதச் சிறைகளில்;
பணங்களின்
முகப்பில் பவனி
வருகிறார்கள்
மனித மனங்களில்
மறந்துவிட்டபடியால்.
மெலிதாய் உதிர்க்கிறார்கள்
புன்னகையை
செல்வந்தன் பெட்டியில்
சிறைப்பட்ட சோகமா
ஏழையின் வயிற்றை
நிரப்பிய மகிழ்ச்சியாவென்று
அறிந்து கொள்ள முடியாதபடி;
அவர் புன்னகை
ஏழையின் கைகளில்
ஜொலிக்க
அவன் ஒளிர்விடும்
சிரிப்பில் தெரியும்
இறைவன் இருப்பு;
கைவிட்டு கைமாறி
கசங்கி கிழிந்து
வாடிப் போயிருந்தும்
வாடாமல் மனிதர்களை
வாழ செய்து
மறைந்தும் மறக்காத
அவர் தியாகங்கள்;
கொள்கைக்கு எதிராய்
துவேஷக் கொடிகள்
பிடித்த பகைவர்
விரல்கள் ஐந்தும்
இப்போது தடவி
மகிழ்கின்றன
அவர் முகப்பை;
"மகாத்மாக்கள் மறைவதில்லை"
நூல்களின் உரைப்பில்
பொதிந்து கிடக்கும்
உண்மைகள் குலுங்கிச்
சிரிக்கின்றன எங்கோ
பதுங்கி நின்று;
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-05-20