நன்றி தமிழகமே!
-கனடாவிலிருந்து பவித்திரா-
அன்புடன் அறிவுசால் ஆன்றுடைத் தமிழகமே!
அணிதிரண்டு நின்றீரே இமாலய வடிவத்தில்!
இன்புறத் திளைத்திட, இனியதமி ழோங்கிட
எஞ்ஞான்றும் தலைநிமிர்ந்து தமிழினம் வாழ்ந்திட
மண்ணும் மக்கள் மன்றங்களா யிணைந்து
மாபெரும் போராட்டம் நடத்தியே என்றும்
பன்னுதற் கரியநல் பணியினை ஆற்றிப்
பாரினில் எம்முடன் பிறப்பெனக் காட்டினீர்!
நன்றியென்ற மூன்றெழுத்தில் நம்முறவு முடிவதல்ல
நனிஉயர் உடல்நிறை குருதியால் நாமொன்றே!
கன்றென நாமிருக்க நாவினால் நீவிடும்;
கருணைமிகு பசுவாய்க் கருத்திலுமைக் கொள்வோம்!
சென்றடையும் பாதையது தூரமில்லை காண்போம்!
சிந்தையிலே தமழீழம் முடிவெனக் கொள்வோம்!
ஒன்றிணைவோம்! உலகெங்கும் உரத்துச் சத்தமிட்டு
உரிமைதனை நிலைநிறுத்த ஒருமனதாய் இயங்கிடுவோம்!
பண்பால், படிப்பால், பக்குவத்தால் உயர்ந்து
பாரினில் எழிலுடன் திகழும் சொந்தங்களே!
உண்மை உறவினை உணர்வினாற் காட்டியே
உலகில் ஈழத்தவன் தனித்தவன் அல்லன்என
எண்பித்தீர்! என்னருமைத் தமிழகமே! நாம்,
எஞ்ஞான்றும் இசைந்து இலங்கிடுவோம் வாழ்வில்!
கண்ணென வளர்ப்போம்! கன்னியாம் தமிழழகை!
காசினி யெங்கும் கமழ்ந்திடச் செய்வோம்!
ஈழத் தமிழனின் இன்னல்களிற் றிளைத்து
இருட்டறை இரும்புக் கூட்டினுள் இடர்ப்பட்டு
வழும் காவலர்தம் அடிகள் உதைகளிற்
சுகத்தைப் பலத்தை முற்றாய் இழந்து
வாழும் நாட்களை வீணே சிறையில்
வாடிக் கழித்தீர் வண்டமிழ் உறவினரே!
நாளும் நினைத்தே வாழ்வோம் இனிதே!
நலமே காண்போம் நிறைதமி ழீழத்தில்!
இனவாத அழிவினில் இடர்ப்பட்டு நாமிருக்க
இந்தியா எமக்குதவ வேண்டுமெனக் குரலெழுப்பி,
மனமொத்து உண்ணா விரதங்க ளிருந்துமே
மானமிகு தமிழராய்த் தீக்குளித்து நின்று,
சினம்கொள் சிங்களத்தின் செருக்கினை அடக்கிடச்
சீர்மிகு தொண்டராய்த் திரண்டு ஈழத்திற்குக்
கனதியாய்ப் புறப்பட்டடீர் காசினியில் எம்துயரம்
கருத்தினில் எடுத்திடக் காரணமாய் நின்றீர்!
அய்யன்மீர் தங்கள் ஒன்றுபட்ட எழுச்சியினால்
அகிலமே அதிர்ந்து ஆட்டமுற்று நிற்கிறது!
மெய்யன்பில் நீர்புரிந்த மிக்கவுயர்; பரப்புரையால்
மேதினியிற் தமிழினத்தின் தீரம் துலங்குகிறது!
பொய்யல்ல புகழுரையும் இவையல்ல எம்
புத்துணர்வின் வெளிப்பாட்டிற் போற்றிடும் வார்த்தைகளே!
துய்யதமி ழன்னைதன் பிள்ளைகளின் நிமிர்வில்
தண்முகம் துலங்கியே தரணியில் ஓளிர்கிறாள்!
காலங்கள் தோறும் கண்ணீரிற் குளித்தோம்!
கலக்கமும் துயரமும் நிறைந்து வாழ்ந்தோம்!
ஞாலத்தில் நமக்கென யாருமில் லையென
நாடோறம் வருத்திய எண்ணமது நீங்கியே
காலத்தால் அழியாத வரலாறு வரைந்திடவே
காத்திரமாய் எமக்கொரு வாய்ப்பினை அளித்தீர்!
சாலவும் நன்றியாய் நடந்துமே நன்கு
தாகம்தீர் இளநீர்தரு தென்னையெனத் திகழ்வோம்!
அன்புடன எம்மிடர்கள்! முரண்பட்டு நிற்குமும்
மத்திய அரசது மாறுபட்டு நிற்கிறது!
கடிதென அறிந்தோம் கையளிப்பு நாடகங்கள்
கணக்கிலா ஆயுதக் கொடுப்புக்கள் தெரிந்தோம்!
கொடிதன்றோ? அவர்செயல் கூடியே எதிர்த்திடுவீர்!
கூர்மையான தரவுகளால் நியாயப் படுத்திடுவீர்!
துடிப்புடன் எழுச்சிகள் தொடர்ந்திடின் ஆள்வோர்
தூயதமி ழகத்தை விஞ்சிட அஞ்சுவரே!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-10-19