போர்தவிர்
அல்வை.கோ.இளஞ்சென்னி
அமைதியின் எதிரியிடம்
அலையும் நீயொரு
யுத்த பேரிகை!
யுத்த மில்லாத
யுகத்தை தேடும்
மானிடப் பிறவிகள்
நாங்கள்: தமிழினம்!
போதை தணியாத
போர்வெறியும்
ஆளத் தெரியாத
அன்பு நெறிகளும்
அற்றுக் கிடக்கும்
சிங்களத் தாயிடம்
சமாதானத் தேடலா?
குரல்மேல்
குரல்கள் எழுந்தும்
குதறி எறிகின்றாள்
சமாதானப் புறாக்களை.
புறாக்களின் இறக்கையை
ஒட்டுண்ணி விலங்குகள்
ஒடித்தெறிய எத்தனை எத்தனம்
அடடா அதுவோ அரசியல்?
இயற்கையை ஈர்த்திட
இவளால் முடியுமா?
வானவெளியும்
பேசும்காற்றும்
பசும்தரைகளும்
பேசத் துடிக்கின்றன கொடுமை கண்டு.
மானிட வர்க்கமே
மேதினி வாழ விழித்து எழுங்கள்!
அங்கே காற்றோடு கலந்து
நாதம் அதிர்கிறது அது
வெறும் சத்தமல்ல
புலியின் தாக பேரிகை
தமிழ் மானிடத்தின்
தானைத் தலைவன்
தீர்க்க தரிசனம்
அலைமோதி ஆர்ப்பரிக்கிறது
அமைதியைத் தேடிய தமிழ்த்தேசம்
அகம் புறம் ஒன்றாய்
சுதந்திர விடியலுக்கு
சமாதான எழுச்சியில் நிற்கிறோம்!
காலம் ஓடுகிறது
சிங்களத் தாயே!
நில்லாதே !
கரங்களை நீட்டு!
யுத்தம் முடியட்டும்.
மறவர் குலத்தோடு
உறவாடி எமக்கு
உரியன எல்லாம்
உடமையாய் ஈதலே வெற்றி!
போர் வேண்டுமாயின்
போய்விடு தாயே!
புலிகளின் புனிதப்படை
பாயட்டும் குகையை உடைத்து.
நரியின் கனவுக்கு
கா..கா௪ பண்ணாது
புலிகள் கூட்டம்!
புலிகள் வானத்தில் ஊடுருவி
புலரும் காலையை
ஏற்றிவர
ஏவுகணை காத்திருக்கு.
அண்டை அயலாரின்
பயிற்சிப் பட்டறையில்
படித்தவை பட்டாளம்
புட்டிப் பாலளவு.
முட்டிய போர்களிலே
பட்ட இரணங்களை
எட்டிப்பார்! எத்தனை.. எத்தனை!
முல்லைப் பிரிவெங்கும்
முதுகை முறித்தாய்
படைத் தளங்கள் எல்லாம்
போட்டடித்து பிணம் குவித்தாய்
கடலில் மூழ்கினாய்
வானத்தில் வலிமை அற்றாய்
இப்போது அப்போது அல்ல
போர் மணந்தால் போதும்
ஊரே கிளம்பும்:
உறவெல்லாம் களம்தேடும்
கயவர் படைகளையே
கிழித்து எறிவர்
வயிற்றில் தீ சுமக்கும்
வீரத் தமிழர் இவர்!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2005-02-11