Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

மண்ணில் துழாவும் மனது

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-09-06

மண்ணில் துழாவும் மனது

மண்ணில் துழாவும் மனது

- முல்லை அமுதன்

அநுராதபுர மண்ணில் இருந்து இன்னொரு தமிழ்ப்பூ விரிந்திருக்கிறது. தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவனான வஸீம் அக்ரம் இருபது வயதில் இப்படி முதிர்ச்சியா? என்னுள் வியப்பு! எனினும் இன்றைய யுகத்தில் ஞானசம்பந்தர்களே அதிகம். போர்ச்சூழல், இராணுவ அடக்குமுறை, வாழ்வுக்கான போராட்டம் …. இப்படித் தொடர்கிறது. நெருக்கடிகளுக்குள் வாழும் ஒவ்வொரு மனிதர்களும் ஞானசம்பந்தர்கள் தான். மொழி முரட்டுத்தனமாக வாழவே செய்யும்.

'படிகள்' இதழாசிரியர் என்கிற போது இரட்டிப்பு மகிழ்வு தருகிறது. இன்றைய புதிய கிராமத்து தமிழ் மணங்கள் வசீம் அக்ரம் போன்ற கவிஞர்களால் தான் உணரப்படுகிறது. அன்புஜவகர்ஷா, அநு. வை. நாகராஜன், தம்பு சிவா, மு.கனகராஜன், பேனா. மனோகரன் எனப்பலர் இலக்கியம் வளர்த்த ஊர். மல்லிகை கூட 'அநுராதபுரம் சிறப்பிதழை' வெளியிட்டு பெருமை சேர்த்துக் கொண்டது.

ஒரு கிராமத்தின் அடையாளம் அந்தக்கவிஞனே. பண்புகளை நேர்த்திப்படுத்துபவனும் அவனே.  ஒரு எழுத்தை லாவகப்படுத்தும் முறைமை கவிஞனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். வார்த்தைகள் வந்து விழும் போது சொற்களாகி எம்மைக் கூட நெறிப்படுத்த, நெகிழவைக்கக் கூடியது.

உண்மையில் ஒரு காலத்தின் பதிவு கவிஞன் தான். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ச்சங்கம் தன் பணியைச் செவ்வனே செய்துள்ளது. எமது கிழக்கிலங்கைக் கவிஞன் பஸீல் காரியப்பரின் 'ஆத்ம அலைகள்' நூலைவெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

வசீம் அக்கிரமின் கனவுகள் அவர் கவிதைகளில் அதிகம் தெரிகிறது. அதிகமாய் வாசிக்கிறார் என்பதும் தமிழை அதிகமாகவே நேசிக்கிறார் என்பதும் மொழிகளின் சொல்லாடலில் தெரிகிறது.

நாம் ஏமாற்றப்படுகிறோம் என்று தெரிந்தும் திரும்பவும் ஏமாற்றப்படவே செய்கிறோம். ஒரு வகையில் கையாலாகாத்தனம் போலும். இப்படித்தான் வாழவேண்டும் என்று சமூகம் கற்றுத்தந்திருக்கிறபாடம். சகமனிதனுக்கு, துப்பாக்கிகளுக்கு, அரச இயந்திரங்களுக்கு அல்லது அரசின் ஏவல்களுக்கு அடங்கிப்போகிற ஒரு சமூக்க கூட்டம். மாற்றம் எங்கும் நிகழ்ந்துவிடப் போவதில்லை என்று தெரிந்தும் வாழப்பழகிக் கொண்ட மௌனங்கள்.

தன் கண் முன்னாலேயே மகள் வல்லுறவுக்குட்படுத்துகையில், மணைவியின் முன் கணவன் வெட்டிக்கொல்லப்படுகையில், வீடு சூறையாடப்படுகையில்- மதங்களின் பெயரால், இனங்களின் பெயரால் இழந்து போயினும் வாழ்கிறோமே. எது கொடுமை?

கவிஞன் அமைதியானவன். அவனுள்ளும் எரிமலை. ஆனாலும் தன்னைப்பண்படுத்திக்கொள்கிற பக்குவம். சந்திரனைத் தொட்ட நாட்டில் கூட மாறாத சோகம் தான் மக்கள் பட்டிருக்கிறார்கள். சொந்த மண்ணின் மைந்தர்களே ஆக்கிரமிக்கின்ற அவலம்.

யார் கற்றுத்தந்தார்கள்? யார் அனுமதித்தார்கள்? ஈராக் முதல் நமது மண்வரை தொடர்கிறது. கவிஞரின் வரிகள் பலஇடங்களில் சோகம் சொல்கிறது.

சில கவிதைகள் மல்லிகை சஞ்சிகையில் வெளிவந்துள்ளது எனில் அங்கு கவிதை செப்பனிடப்படுகிறது என்றே அர்த்தம்.

அட்டைப்படம், அச்சிடல், எழுத்துப்பிழையின்மை என அதிக கவனம் எடுத்து இந்த நூல் வெளிவந்துள்ளது.

'மாமிசப்பாடலுக்கான
குருதிப்புனைவுகளில்
கல்லறை தூரத்தைக்
கணக்கிட்க் கொண்டு
உயிரின் இருத்தல் தொடர்கிறது'


'எங்கள் தேசம் 2006' என்னும் கவிதையில் இப்படிச் சொல்லும் இவர் பிறிதொரு கவிதையில்

' அமாவாசை அடகு வைத்துக்கொண்டிருந்த
இரவில்
என் கடைசி துளி உயிரின் கதறலை
கடலலைகள் காற்றின் துனைகொண்டு
உன் முகத்தில் துப்பிவிடும்'


என எழுதுகிறார். இன்னொரு கவிதையில்

' மீண்டும் நான் என்
இருட்டறை நோக்கி
உட்காயங்களுடன்
உருகி உறைகிறேன்'


ஒவ்வொரு கவிதைக்குமான தலைப்பே கவிதைகள் தான்.

மண்ணில் துலாவும் மனது.
மரணவெளி விவரணைகள்.
வாழ்வு வரைந்த விதி.
மரணப்பொழுது.
காதல் அல்லது கவிதை சொல்லும் காலம்.
யதார்த்தின் தோல்வி குறித்து...
ஆயுதத்தின் ஓலம்.

இங்கு இன்னொரு அதிசயம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. புதிய வீச்சுடன் ஒரு இனத்தின் பரிணாம வளர்ச்சியின் எழுச்சியுடன் எழுத்துக்கள் அச்சில் வருகின்றன. மஜீத், ஆத்மா, பௌஷர், சோலைக்கிளி, பொத்துவில் ஷாஜகான், சுல்பிகா, நாச்சியாதீவு பர்வீன், பஹிமா ஜெகான் இவர்களுடன் வசீம் அக்ரம்.

பலவகையில் காயப்பட்ட நகரம் அநுராதபுரம் எனினும் அங்கும் தமிழ் வளர்கிறதே எனும் போது அதிக மகிழ்ச்சி தருகிறது. அநுராதபுரம் சார்ந்த குக்கிராமங்களில் இருந்தும் தமிழ் தன் அடையாளத்தைக் காட்டி நிற்கிறது. பதிப்புத்துறையிலும் முன்னணியில் நிற்கும் நம்மவர்கள் எதிர்காலத்தில் நல்ல படைப்புகளை வசீம் அக்ரம் போன்றோர்கள் ஊடாக எதிர்பார்க்கிறது.

நூலைப் பெற....
வசீம் அக்ரம்
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
ஒலுவில் 32360
இலங்கை.


முல்லை அமுதன்.


Comments

Join the Vaarppu Community

Log In Register

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

புதிய விமர்சனங்கள்

விலகிச் செல்லும் பாதை
இதுவரையும் கருத்தியலில் முதன்மைப்பட்டிருந்த கருணாகரன், அரசியல் நிலவரங்களைக் கவிதையில் குவியப்படுத்தி வெளிப்படுத்திய அவர், இந்தத் தொகுதியில் அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளார் ...
இருப்புக்கும் இன்மைக்கும் இடையே சில குரல்கள்
இந்தக் கவிதைகளில் படிமம், குறியீடு, அழகியல் என்ற வழக்கமான கவிதைகளுக்கான கல்யாணக்குணங்களைத் தேடுபவர்கள் ஏமாந்துப் ...

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube