கவிதை :: ரகசியம் - நெப்போலியன், சிங்கப்பூர்
ஒருவருக்கொருவர் மறைத்துக் கொண்ட சில அல்லது பல விடயங்கள் குயில் முட்டையாக தங்கள் கூட்டில் கிடக்கிறது என்ற பிரக்ஞையுடன் வாழ்வைக் கழிக்கின்றனர். ஒருநாள் முட்டை பொரிந்து, குயிலாக அது கூவி தன் சுயரூபத்தைக் காட்டும் பொழுது, அது பல ஆழங்களையும், புதைத்தவைகளையும் வெளிச்சமிட்டுக் காட்டலாம்.
அன்றைய தினத்தை, உண்மையின் தினத்தை எப்படி நேர் கொள்வர்?
உண்மை நடைத்தையில் உருகிப் போய், அதன் மூலமாகக் கிளர்ந்தெழும் பிணைப்பின் வலிமையில் தான் நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த பிணைப்பு சக்தி மிக்கதாக இருக்க வேண்டுமென்றால், இறந்தகால ரகசியங்களை மறைவாக திரும்பி நோக்கும் பார்வைகள் தவிர்த்து, நேர்மையாக வாழ வேண்டும் இனி வரும் காலத்தில்.
பின்னால் ஒரு நாள் குயில் கூவுவதாக இருந்தாலும், அதை இறந்து போன காலத்தில் எழும்பிய ஒரு இசையாகக் கருதி, அதை விவாதிப்பதைத் தவிர்த்து விட்டு, இயல்பாக வாழ்க்கையை நடத்திக் கொண்டும் போகலாம்.
உண்மை பேசுகிறேன் என்று சொல்லி, கடந்த கால ரகசியங்களை ஒருவருக்கொருவர் பரிமாறி, பின்னர் அதுவே பல சந்தேகங்களையும், ரணங்களையும் உண்டாக்கிவிடக் கூடிய வாய்ப்புக்ளையும் தவிர்க்க வேண்டும். இதையே மனவியல் மருத்துவர்களும் கூறுகிறார்கள். 'செய்த ஒவ்வொரு தவறையும் தன் துணைவரிடம் சொல்லியே தீரணும் என்ற கட்டாயமில்லை. தன்னைப் போல தெரிய வரும் பொழுது, அதை நாசூக்காக சமாளித்துக் கொள்ளலாம். ஆனால், கடந்த கால செயல்களைத் திரும்பவும் செய்யவோ, தொடர்பு கொள்ளவோ முயலாமல், இனி வரும் காலங்களில் உண்மையாக இருந்து விடுங்கள்' என்பது தான் பல சங்கடங்களைத் தவிர்க்கும் வழி என்று சொல்கின்றனர்.
அதையே இந்தக் கவிதையும் கூறுகிறது. பாராட்டுகள் - நெப்போலியனுக்கு.
காலம் அருளினால், அந்த முட்டை பொரிக்கவியலாத கூமுட்டையாகக் கூடப் போய்விடக் கூடும் -யாருக்கும் எந்த வித தொந்தரவும் இல்லாதவாறு. இதைப்பற்றி கவிதையில் சிந்திக்கவே இல்லை. மாறாக, பொரிந்து வந்தாலும், அதை எதிர்கொள்ளும் வகையில், உண்மையாக ஒருவரும், வேடமற்ற ஒருவருமாக இருவரும் இருக்க வேண்டும் - என்றாவது ஒரு நாள் பூட்டப்பட்ட மன அறைகள் திறக்கப்பட்டு, 100% சதவிகிதம் ஒருவருக்கு மற்றவராக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தான் கவிதையை நேர்மையானதாக அடையாளம் காட்டுகிறது.
நன்றி - ஒரு நல்ல கவிதைக்கு.........
கவிதை :: ரகசியம் - நெப்போலியன், சிங்கப்பூர்
- சாஜகான், இந்தியா
Comments