01.
இறுதிச் சடங்கு
----------------------------
புதைக்கப்படும் அவ்வுடலை நினைப்பது
எவ்வளவு பெரிய சஞ்சலம்.
அங்குமிங்குமாக புரட்டி புரட்டி
நீராட்டிய அந்தவுடலை,
இறுதியாக பார்க்க எவ்வளவு ஆனந்தம்,
கவலைகள் சுமந்த பொழுதென்றாலும்
இறுதிப் பார்வை ஆனந்தம் தான்.
இறுதிப் படுக்கை வரை
எத்தனை சடங்கில்
எத்தனை சண்டையில்
எத்தனை விருந்தில் கலந்து
இன்பப்பட்ட அந்தவுடல்,
நோயில் விழுந்து தோய்ந்து
இறந்து போன பின்
மறுக்கவும் தடுக்கவும் முடியாமல்
மண்ணில் புதையுண்டு போவது
கட்டளையெனின்.
புதைக்கப்பட்டவுடல் நண்பனாக
அல்லது உறவாக இருந்து போனாலும்
மண்ணில் புதையுண்டு போகும் போது
பார்ப்பது கஷ்டம் தான்,
அடக்கஸ்தளம் விட்டுப் போகும் வரையில்.
02.
ஆல மரத்துப் பேயும் அம்மம்மாவும்
------------------------------------------------------------
ஊர் வடக்கு எல்லைப்பக்கமாக
ஓங்கி வளர்ந்து நின்ற அந்த மரத்தில்
பேய்கள் காய்த்திருப்தாக அம்மம்மா
சொல்லும் கதையில் பயமிருக்கும்.
ஆலை மரத்தைத் தாண்டிப் போய்தான்
தாவணிக் குமரிகள் குடி நீர்
இரைத்து வர வேண்டுமென்பதாகவும்,
எங்க இன்ஜினியர் மாமா கணிதப்பாடம்
கற்க கஷ்டப்பட்டு போனதெல்லாம்
அந்த ஆல மரத்தை தாண்டித் தானாம்.
ராத்திரி வௌவால்களின்
சப்த மொழிகளை பேய்கள்
ரகசியமாய் அறிந்து கொண்டதாகவும்,
அம்மம்மா சொல்லும் கதை பயங்கரம்.
நிசி நாய்களின் ஊளையில்
வௌவால்களின் சப்தம் அடங்கிப்போவது பற்றி
அம்மம்மாவிடம் கேட்டால்?
பேய்களின் திருவிழா நடந்தேறுவதாக
அம்மம்மா மொழிவா.
இத்தனை கதையையும் அம்மம்மா
சொல்லக்காரணம்.
அந்த ஆல மரத்துக்கிளை விழுதில்
ஒரு தடவையேனும் ஊஞ்சலாட வேண்டுமென்று,
பகல் உணவின் போது,
அம்மாவிடம் கேட்டதையும், குமரிப் பெண்ணாய்
நடக்க கத்துக்கோயென்று அம்மா கண்டித்ததையும்,
அம்மம்மா செவியுற்றுருக்க கூடும்.
03.
அப்பாவின் கோபம்
----------------------------------------
இறப்புக்கு வந்தவர்களில் சிலரை
தன் கடைசி நாளில் அப்பா
பார்த்திருக்கவில்லை.
உசுரோடு இருக்கும் போதோ
நோய்மையில் சுருண்டு பாய்
படுக்கையாகியிருக்கும் போதோ
வராத கூடப்பிறந்தவர்களும்,சொந்தங்களும்,
நெடு தூரக்கிராமத்திலிருந்து வந்து
கண்ணீர் வடிப்பதை அப்பா உயிர்த்திருந்தால்
கண்டித்திருப்பார்.
ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட
வழியில்லாத படி படுக்கையாகி
இருக்கும் போதும்,
தனக்கு நான்கு ஊர் கழித்து
உறவுகளிருப்பதாக சொல்லவேயில்லை.
அம்மாவும் அப்பாவின் உணர்வுக்கு
கட்டுப்பட்டவள் தான்.
மூச்சு கூட விடவில்லை அம்மாவும்,
இது பற்றி.
தலையில் அடித்தடித்து கதறும்
என் அப்பம்மாவை பார்த்து
கடைசியாய் பார்த்துக்குங்கே உங்க,
பிள்ளையின் முகத்தையென்று சொல்லும் போது.
அப்பம்மா தன் தலையை உயர்த்தி
பரிதாபமாக என்னைப் பார்த்தப்போ?
அப்பா என்னை கோபத்தோடு பார்த்ததை
நான் கவணிக்கத் தவறவில்லை.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2014-12-31