மாவீரர் நினைவு சுமந்து.
கார்த்திகைத் திங்கள் - எம்
கல்லறைத் தெய்வங்களுக்காய்
நெய்விளக்கேற்றி உம்
நினைவு சுமந்து நிற்கின்றோம்.
விடுதலைக் கனல் சுமந்து
வீணர் பகை எரித்து
வீசும் புயலாய்க களமாடி
வீழ்ந்து விட்ட வீர மறவர்களே !
எட்டாத உயரத்தில் நீங்கள் இருந்தாலும்
எழுதுகோல் ஒன்றினால் - உம்மை
எழுத்தில் வடிக்க முடியாது.
புலம்பெயர்ந்து நாம் வாழ்ந்தாலும்
பலம் நீங்கள் என்பதை நாமறிவோம்
நெஞ்சில் உங்கள் நினைவுகளை
நாம் சுமந்து இத் திருநாளில் - உம்
கல்லறை முன் நின்று
கார்த்திகைத் தீபம் ஒன்றினை ஏற்றுகின்றோம்
எம் தேசத்து நாயகர்களே !
விடியலின் முகவரியில் உங்கள் திருநாமம்
வருங்காலம் வணங்கும்
உங்கள் பெயர் சொல்லி !
எங்களின் விடியலுக்காய்
உங்கள் கண்களை மூடியவர்களே !
உங்களின் கனவு மலர்ந்து வரும் நாளில்
எங்களின் தலை குனிந்து வணங்குகின்றோம் !
கனடாவிலிருந்து நாவேந்தன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2004-11-21