அவலம் நிரம்பிய கதை.. போராளி
01.
அவலம் நிரம்பிய கதை
---------------------------------------
ஏதோவொரு சிறையில்
ஒரு கவிஞன் எழுதுகிறான்...
பற்பசை அல்லது கரித்துண்டு கொண்டு...
அவன் எழுதுவதெல்லாம் அவலம் நிரம்பிய கதைகள்...
என் தேசத்தைத் தாண்டி
கேட்கும் குரல்களை
பதிவு செய்ய ஒலிநாடா வேண்டப் போவதில்லை
என் பேனா பதில் சொல்லும்...
என் இரத்தங்களே...
உணர்வுகளை துண்டம் செய்யும்
உலகை விட்டு
அழைத்துச் செல்லப்படும் போது
வெள்ளைத்துணி கொண்டு போர்த்தப் படுகிறீர்கள்
அதுவுமின்றிப் போனால்
அழுகி நாற்றமெடுக்கும் வரை கவனமெடுப்பதில்லை...
கதறியழும் குழந்தைகளை
வயிற்றுக்குள் திணித்து
'கங்காரு'கள் போல மாறிப் போவதும் நீங்கள்தான்...
மாஞ்சையுள்ளவன் என்று
எதிர்த்து நிற்கும் போது
துப்பாக்கி துளைத்த ஆடைகளுக்குச்
சொந்தக்காரர்களாவதும் நீங்களே தான்...
பெண்களைக் காக்க பெரும் பிரயத்தனம்
செய்கிறீர்கள்...
விருப்பமின்றியே
தோல்விகளை தோள்மேல் சுமந்து கொண்டு
முகத்தைத் திருப்பிக் கொள்கிறீர்கள்...
என் இரத்தங்களே...
என் தேசத்தைத் தாண்டி
உங்கள் குரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது...
இங்கே நான் செய்வதையே
ஏதொவொரு சிறையில்
ஒரு கவிஞன் எழுதுகிறான்...
பற்பசை அல்லது கரித்துண்டு கொண்டு
அவன்
எழுதுவதெல்லாம் அவலம் நிரம்பிய கதைகள்...
02.
போராளி
--------------------
முற்றுகையிடப்பட்ட
முழு நிலவைப் பற்றிப் பிடித்தல்
தொடர்பான தொடர்கதை...
முற்றுப்புள்ளி வைத்து
முடிக்கத் திராணியில்லை...
கால்களை மீறி மிஞ்சி
கைகள் நடை போடத்
தொடங்கி விட்டன...
முட்டையிட்டு
அடைகாத்துக் கிடக்கவும்
அவகாசம் வைக்காத
வாழ்க்கை சகிதம்
'கொக்கரக்கோ' நிகழ்கிறது...
பேசாமல்...
நீட்டி நிமிர்த்தி
உடலைக் கட்டி
கோணிப்பையிலிடாமல்
எரியும் நெருப்பில்
தலைப் பக்கமாய் பிடித்து
வைத்து விட்டால் என்ன?
எனத் தோன்றுகிறது...
மிகையான உடல்பருமன் என்று
இன்னொருவர் வாய்க்கேளாமல்
என்னை நானே வேலை வாங்கத்
திட்டம் தீட்டியபடி
பேனைக்கு உயிர் கொடுக்கிறேன்...
ஓ...... முழு நிலவே
முற்றுகையிடப்பட்டதாய் எண்ணினாலும்
முடக்குகள் இல்லாத
வசந்த கால வாழ்க்கை மீதான பற்றுதலுடன்
மீளாத்துயர் நீங்க
போராடுகிறேன் - ஆனால் போர் இல்லை...
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2014-10-04