புதிய எழுத்து.. வெறுப்புமிழ்ந்த கல்
01.
புதிய எழுத்து
------------------------
அதிகாலையில் எழுந்தபோது
பனிப்புகாரைத் தவிர எதுவும் தெரியவில்லை
எந்த மொழியிலும் ஒரு சொல்லும் மிஞ்சவில்லை
எவரிடமும் ஒரு துளி நினைவுமில்லை
எல்லாம் கரைந்தழிந்தன
அந்த ஒரேயொரு விஞ்ஞானி
ஆளியைத் தவறி அழுத்தியபோது.
நினைவுகள் இல்லாத மனிதர்களுக்கு
பயணங்களுமில்லை
அடையாளங்களுமில்லை
அதனால்
எந்த வீதியிலும் ஒரு பயணமும்
நிகழ்வதற்கான அவசியமிருக்கவில்லை.
என்ன அதிசயம்
நகரத்திற்கும் யாரும் வரவில்லை
எங்கே போவது
யாரைக்காண்பது
எதைச் செய்வது
என்று தெரியாத் திகைப்புகளில்
அலைந்தன ஒவ்வொருவரின் படகுகளும்
எங்கிருந்தோ வந்த மூங்கிலின் ஒலியைக்கூட
யாராலும் இனங்காண முடியவில்லை
ஒரு எறும்பையும்
அதன் பாதைகளையும் கூட.
எவரிடமும் பகைமையின் எந்தத் தடயமும்
எஞ்சவில்லை
கணவனோ மனைவியோ
பிள்ளையோ
அண்ணனோ தம்பியோ
நண்பனோ அயலவனோ விருந்தாளியோ
வேற்றாளோ காதலனோ
அதிகாரியோ பணியாளோ
யாரென்று தெரியவில்லை
யாருக்கும்.
எல்லாப் போதையும் தீர்ந்தது
ஆளியைத்தவறி அழுத்திய விஞ்ஞானிக்கு ஜே
மிஞ்சிய தொல்லெச்சங்களை
எரித்து விடும் கருவியையும் இயக்கிவிடுக.
02.
வெறுப்புமிழ்ந்த கல்
------------------------------
ஒலிவற்றிக் காய்ந்த குருட்டு இரவில்
பழித்தன எல்லா நட்சத்திரங்களும்
சாட்சி சொல்வதற்கும் அஞ்சிய நிலவை
எந்த வசைச் சொல்லாற் திட்டுவேன்?
ஒரு வழிகேட்டு அலைகிறேன்
காவற்காரரிடம் கெஞ்சி,
படைகொண்டு போக அல்ல
பொருள்சேர்த்துப்போகவும் அல்ல
வளர்த்த நாயைக்கொண்டு செல்லவும் அல்ல
வேதனை நிரம்பி
வலியின் வேரோடிய
என்னுடலில் வளரும் நோயைக் கொண்டு தொலைக்க
பிணியெல்லாம் பரவிய ஊரில்
மருந்துமில்லை மருத்துவரும் இல்லை
பாழடைந்த மருத்துவமனைகளின்
முனகலொலி உடலையூடுருவி
நெருப்பையள்ளிக் கொண்டலைகிறது
சிதைதேடி.
குலுங்கும் மார்பிலிருந்து
கொட்டுண்டன துயர்ப்பாசி படர்ந்து வழுவழுப்பான
ஈரமூறிய வார்த்தைகள்.
அவற்றை நான் சேகரித்து வைத்திருந்தேன்
காய்ந்து வரண்ட கோடைக்குள்ளும்
தோலையுரித்துச் சோதனையிடும் படைவீரரிடமிருந்தும்
நானே எரிந்த பல நாட்களிலும்
அவற்றில் தீபடாமலே.
அவமதிப்புகளின் கீழான
நிலப்பரப்பில்
இறுகிப்படிந்திருக்கும் மௌனத்திற்கிடையில்
ஒரு சொட்டுத் துளி
உடற்சாறு தேங்கிக் கிடந்தது
வனப்பு மிக்கதொரு
கடற்கரையும்
காகங்கள் கரையும் நாட்களும் இருந்தன
எனவும்
ஒற்றையடிப்பாதைகளில்
எறும்புகள் தம்பாட்டிலும் மனிதர்கள் தம்பாட்டிலும்
போய்வரக்கூடிய காலமொன்று
இருந்ததாயும்
சொல்லிக்கொண்டு.
இன்றோ
தெருமுனையில்
பெருமரத்தின் கீழே இருந்தது கோயில்
நாயுறங்க.
நாயினடியில் ஓலமிட்டவாறு
என்னுடலும்
அதன் வால் நீண்ட
குருத்தெலும்பும்
வழியற்றுச் செத்தான் ஒரு மனிதனென்று சொல்ல.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2012-11-29