மழைக்கடுதாசி .. ஆர்வமழை
01.
மழைக்கடுதாசி
--------------------
அன்றும் மழை
பெய்து கொண்டிருந்தது
நீர்த்திவலைகளை வாரி
இறைத்துக்கொண்டு,
மூடிய கதவின் பின்
தபால் பெட்டியில்
சிறு ஓட்டை வழி
கடிதங்களும் சிறிது
நனைந்து தான் விட்டது.
அனுப்புனர் விலாசம்
எழுதும் இடத்தில்
முழுதும் மழைத்துளிகள்
அன்றும் மழை
பெய்து கொண்டிருந்தது
02.
ஆர்வமழை
---------------
மழையில்
எந்த மழை சிறந்தது?
சிறு தூறலா,
இல்லை அடித்துப்பிளக்கும் மழையா?
வெறுமனே போக்குக்காட்டி விட்டு
போகும் மழையா?
அல்லது
சிறிதும் எதிர்பார்க்காத கணத்தில்
கிளையிலிருந்து
சட்டெனப்பறந்து போகும்
பறவை போல,
தூறிக்கொண்டிருந்து விட்டு
சட்டெனக்கலையும் மழையா?
அல்லது
நேற்றுப்பெய்த மழையா ?
இல்லை, அது கொஞ்சமே பெய்தது.
இன்று பெய்து கொண்டிருக்கும் மழையா?
அது இன்னும் பெய்து முடியவில்லையே
பிறகெப்படி சொலவது ?
அன்று பெய்த மழை,
நேற்று பெய்த மழை
இன்றும் பெய்யும் மழை
நாளைக்கு பெய்தாலும்
பெய்யும் மழை
எதுவானால் என்ன ?
அதுவும் மேலிருந்து
கீழிறங்குவதைப்
பார்ப்பதில் தான்
நமக்கு
எத்தனை ஆர்வம்...?!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-09-05