மாறாதவன்… சேர்ந்து… மனிதன் காட்டிய பாடம்… தொடரு...
01.
மாறாதவன்…
-------------------
எந்த விதைக்கும் பிடிப்பதில்லை
பிழிந்து
எண்ணெய் எடுக்கப்படுவது,
எண்ணமுண்டு எல்லா விதைக்கும்-
மண்ணில் விழுந்து
மரமாகவேண்டும் முளைத்து,
மகசூல் கொடுக்கவேண்டும் கிளைத்து,
மக்களுக்கு உதவவேண்டும் தளைத்து…!
மாறுதலாய் இருக்குதே
மனிதனின் எண்ணம் மட்டும்-
விதையை நசுக்கி
எண்ணெய் எடுக்கிறான்,
மரத்தை வெட்டி
கரியாக்குகிறான்..
மாறவில்லையே மனிதன்,
மாறியபோதும் காலம்…!
02.
சேர்ந்து…
-------------
மனிதனே,
ஒன்று சேர்ந்த நூல்களால்
உன் மானம் காக்கப்படுகிறது-
உடையாகி..
நீமட்டும் ஏன்
நின்று தவிக்கிறாய்
தனியாய்…!
சேர்ந்து வாழ்
சோர்வு இல்லை…!
03.
மனிதன் காட்டிய பாடம்…
---------------------------------
கன்றுக்குட்டி
கற்றுக்கொடுத்த பாடம்-
முட்டினால்தான்
கிட்டும் பால்..
எல்லோரையும்
முட்டாளாக்கிவிட்டு
மனிதன்
காட்டிய பாடம்-
வைக்கோலிலே கன்றுக்குட்டி…!
04.
தொடரு...
--------------------
முன்னேறத்துடிக்கும் இளைஞனே
முடங்கிவிடாதே சோம்பலில்,
முன்வைத்த காலை
நடை
முடியுமுன்னே எடுக்காதே..
போய்க்கொண்டே இரு
பாதை இருப்பது உனக்காக,
பாதையில் வருவது
பாலைவனமானாலும்
பயணத்தை நிறுத்தாதே-
புசிக்கக் கிடைக்கும்
பேரீச்சம்பழமும்,
பருகத் தண்ணீரும்...!
பாதையைப் பார்த்து
பயணத்தைத் தொடரு,
வராது
தோல்வியாம் இடரு...!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-05-15