கருவறையே கல்லறையாய்...
-------------------------------------
தூளியிலிருந்து கொட்டின துளிகள்!
தூக்கம் கலைந்து அழுதன தளிர்கள்!
கொட்டியது சிறுநீர்த் துளிகளா? - அன்றி
கொடிய சோகத்தால் விழிநீர்த் துளிகளா?
பச்சை மண்ணுக்குப் புவிதந்த சரித்திரம்!
பாழும் எய்ட்ஸால் வந்த தரித்திரம்!
ஆட்கொல்லி நோயில்லா அன்னையாக
அரவணைப்போம் ஓடி வா ஆருயிரே!
விலைமாதரிடம் வாங்கிய வினையா?
விதிவசத்தால் ஏற்றப்பட்ட குருதியா?
சோற்றுக்கு வழியின்றி சோரம் போனாரோ?- உடற்
சுகமே பெரிதென சுயநினைவிழந்தாரோ?
பெற்றோரில் யார் செய்த குற்றம்?- எனப்
புரியாது குழந்தை அழும் நித்தம்!
கருவறை மழலைக்குக் கல்லறையா?
கசியும் முலைப்பாலே கடும் நஞ்சா?
யாரை எதுவெனக் குற்றஞ்சொல்ல?
ஏதேனும் வழியுண்டோ எமனை வெல்ல?
மலர்ந்ததுமே மடிகின்றோம் மழலை நாங்கள் - இனி
மலடாகிப் போகட்டும் இம்மண்ணின் பெண்கள்!
சிற்றின்ப உணர்வுகள் சிலிர்த்தெழும் நேரம்
சீர்கெட்டு வழிமாறி சிதையாதீர் ஒருபோதும்!
அற்ப சுகத்திற்கு வழிகாட்டி நண்பன் - தன்
கற்பின் வழிநின்றுனைக் காப்பவள்தான் மனைவி!
இனிவரும் காலமேனும் விடிந்திடுமோ? - அன்றி
எப்போதும் இந்நிலைமை தொடர்ந்திடுமோ?
எய்ட்ஸின் வைரஸே ஒழிந்துவிடு!
எதிர்காலச் சந்ததியை வாழவிடு!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-05-15