விழி! எழு! தாயே!
-நா.முத்து நிலவன்-
இமயத் தலைமுடி நரைத்தஎன் தாயே!
எத்தனை புகழ்வளர்த்தாயே - உன்
குமரிக் கால்களில் கொஞ்சும் அலைகளில்
நெஞ்சினைக் கொள்ளைகொண்டாயே! - முன்
அமைதியும் அழகும் எங்கு தொலைத்தனை?
அய்யகோ! இன்றைய நிலவரம்! - மனச்
சுமையினை எங்குபோய்ச் சொல்லுவேன்? அடடா!
சூழ்ந்ததே இனமதக் கலவரம்!
புத்தரும் காந்தியும் போலப் பெரும்புகழ்ப்
புத்திரர் உனக்கென்ன குறையா? - இனி
இத்தனைப் பெருமைகள் இருந்தும் உன்பிள்ளைகள்
இன்னமும் நலிவுறல் முறையா? - மத
யுத்தமும் சாதியால் ரத்தக் களரியால்
உயிர்ப்பலி யாவதும் சரியா? -இவை
ஆத்தனைக் குள்ளுமோர் சுயநலப் பேய்பிடித்(து)
ஆடுதல் இனியும் காண்கிலையா?
விடுதலை பெற்றநள்ளிரவிலே மௌனமாய்
விரதம் இருந்ததேன் காந்தி? - மதப்
படுகொலை தொடர்வதும் பாரதர் மடிவதும்
பார்த்துத் தொலைந்ததோ சாந்தி? - இனி
ஆடுதலும் கெடுதலும் அண்ணனே தம்பியை
ஆடிப்பதோ இடிப்பதோ தாயே! - ஒரு
முடிவிலையா?உன் மோனம் கலைந்திடு!
மூர்க்கமாய் விழி! எழு! தாயே!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01