மரண அழைப்பு.. காலநதி.. நிகழ்வு
01.
மரண அழைப்பு
--------------------------
வாழ்க்கைப் புதிர்
அவிழ்கிறது
சுவாரஸ்யமற்ற பக்கங்களைப்
புரட்டியபடி
திரைச்சீலை அகன்றது
கட்புலனாகாத காட்சிகள்
கனவில் விரிந்தது
ஆற்றுப்படுத்த எவருமின்றி
உள்ளம் பொங்கி எழுகிறது
நேர்பட்ட நெஞ்சகத்துக்கு
எதுவும் தவறாகவே தெரிகிறது
விடியல் வரை
முள்படுக்கை தனில்
உறக்கம் வராமல்
புரள்கிறேன்
கசங்கிய ஆடையுடனும்
குளித்து நாளானதால்
கவுச்சி நாற்றத்துடன்
சுற்றித் திரிகிறேன்
துரதிஷ்டம் துரத்தியடிக்கிறது
என்னை
துன்பக் கேணியில்
காப்பாற்ற எவருமின்றி
முழுவதுமாக
மூழ்கிக் கொண்டிருக்கிறேன்.
02.
காலநதி
-----------------
நிறைவேறாத ஆசைகள்
குவியலாக
மனதில் நிரம்பிக் கிடந்தன
சவக்கிடங்கில்
உறங்கும் பிணமாக
என் வாழ்நாள் கழிந்தது
ஆயிரங்கால் மண்டபத்தில்
ஏறி விளையாடும்
அணிலாக நினைத்து
உலகம் என்னை கேலி செய்தது
முகவரியைத் தொலைத்து
நடுநிசியில் நடமாடிய என்னை
நாய்கள் துரத்தின
சித்ரவதைக் கூடமான
இவ்வுலகிலிருந்து
தப்பித்து ஓடநினைத்த நான்
தவறி விழுந்தேன்
நிரபராதியை
தூக்கு மேடையேற்றும்
நயவஞ்சக சமூகத்திடம்
சிக்கி சீரழிந்தேன்
மாம்சத்தை விடுத்து
உதிரத்தை உறிஞ்சும்
சாத்தான் குஞ்சுகள்
சட்டம் இயற்றுகின்றன
இப்பூவுலகில்.
03.
நிகழ்வு
--------------
வெளி
அனைத்தையும்
உள்ளடக்கி இருக்கிறது
தண்ணீர் தனது
உள்ளக்கிடக்கையை
முகிலாகித் தணித்தது
கூண்டுப் பறவை
இறக்கையைக்
கோதிக் கொள்ளும்
வான விதானத்தைப்
பார்த்தபடி
கருடன் நிழலைக் கண்டு
அஞ்சும் கோழிக் குஞ்சுகள்
பரிதி முளைக்கும் வானம்
தங்க நிறத்தில் மின்னும்
ஒரு மிடறு நீர்
உள்ளே சென்றவுடன்
உடல் ஆசுவாசம் கொள்ளும்
மழையின் ரூபம்
விழும் இடத்தைப் பொறுத்து
மாறும்
ருசி கண்ட பூனை
நடுநிசியில் பாத்திரத்தை
உருட்டும்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-04-26