பனிப்பிரதேச பேரழகி!.. கனவு உயர யூகங்கள்!.. அகால டைரி!
01.
பனிப்பிரதேச பேரழகி!
-------------------------------
ஒரு
வெளிர்நீல மைதானத்தின் கீழ்
பனிக்குவியல்களை உரிமை கோர
நிதர்சனப்படுகிறது ஒரு புகைப்படம்!
கொஞ்சம் எடுப்பாகவும்
கொஞ்சம் மிடுப்பாகவும்
வண்ணம் பூசிக்கொள்கின்றன
அவள் அழகுகள்!
மிதமாய்
தூறல் விட்டுக்கொண்டே
அங்குமிங்குமாய்
சில புன்னகை மழைகள்...
ஆர்குட்டையோ
முக நூலையோ
இன்ன பிற சமூக வலைத்தளங்களை
கவர்ந்து விட எத்தனிக்க
முற்றிலுமாக
முடங்கிக்கொள்கிறாள்
ஒரு
குளிர் தாங்கும் மேலாடையில்!
02.
கனவு உயர யூகங்கள்!
--------------------------------
வெறுமன
பூக்கள் மட்டுமே
நிறைந்திருக்கும் காடு...
செங்குத்தான
ஒரு மர இடுக்கில்
வேட்டையாட காத்திருக்கும்
உங்களின் யூகங்கள்!
யாரும் நுகர்ந்திடாத
வாசம் கொண்ட
கவிதைகள்
சறுக்கலான பாதைகளில்
வெட்கி ஜீவித்திருக்கும்...
கனவு தேவதைகள்
கருத்தரித்து
விட்டுச்சென்றவையாய் இருக்கலாம்...
பிறந்த பசியில் அழும்
ஒவ்வொரு பத்தியையும்
உயிர் உருவம் அற்ற
ஒவ்வொரு காதலிகள்
பசியாற்றிக்கொண்டிருக்கக்கூடும்!
அவள்கள்
மிக பரிச்சயமான
முகமாகவும் இருக்கலாம்...
உலகம் கண்டிடாத
ஏவாளாகவும் இருக்கலாம்!
03.
அகால டைரி!
----------------------
நடந்து முடிந்தவற்றை
பேசிக்கொண்டிருந்தது
ஒரு அகால டைரி!
பக்கம் பக்கமாய்
பேனா மையின் ரேகைகள்
சற்று கீறலுடனே கையொப்பமிட்டிருந்தன!
நேற்று எழுதிய
பக்கத்தின் கடைசி வரியில்...
மை தீர்ந்து போய் இருக்க
இன்று எழுத முடியா மிச்சத்தை
மொத்தமாய்
நிறைவு செய்துகொண்டிருந்தது
கண்ணீர் கூட்டம்
ஒரு அகால மரணத்தில்!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-02-27