திமிர்க் காற்றும் விளை நிலமும்.. கோலமும் அவளும்
01.
திமிர்க் காற்றும், விளை நிலமும்
----------------------------------------
இடம்பெயர்ந்தறியா விளைநிலத்தை
தேடி வந்து விதைகளைத் தூவிச்செல்கிறது
வஞ்சக வானம் விதைத்த
பெருஞ்சீற்றத் திமிர் பிடித்த காற்று...
பாலின வேறுபாட்டின் மங்கலான ஒளியில்
நெல்லெனப் பதரைத் தாங்கிய விதைகளை
விழுங்கி பசலை கொள்கின்றது
விளை நிலம்...
விதைக்கப்பட்ட விதைகள்
பதரென உமிழ்கின்றன
ஒரு வீணடித்த தலைமுறையை...
ஆங்கொரு மூலையில்,
விளை நிலங்களை ஒத்துவிடும்
தலைமுறையை தேடி உருவாகிறது
சீற்றத்திமிர் கொண்ட காற்று
மிகச்சிறியதொரு சுழலென...
02.
கோலமும் அவளும்
-------------------------
அதிகாலைகளில் நீ குனிந்து
கோலமிடுகையில்
கருமேகங்களெல்லாம்
நீர்வீழ்ச்சியாய் வீழ்கின்றன
உன் கருங்கூந்தலாய்...
உன் கூந்தல்
சூடும் மல்லிகையில்
பிரதிபலிக்கும் அதிகாலைச்சூரியனின்
பேரொளி...
உன் விரல்கள்
உதிர்க்கும் கோலப்பொடியில்
நீரின்றி நீந்துகின்றன
அழகான வெள்ளை மீன்கள்...
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-10-23