நான் யார்?(பிரிந்தே இருக்கிறேனின் பின்பக்கம்)
----------------------------------------------------------------------
நான் ஆண்டாளா? - இல்லையே -
அபகரிக்கும் ஆசை எனக்கில்லையே
பின் ஏன் கண்ணா -
என் மனம் உன்னைத் துதிக்கிறது.?
நான் பாரதியா? - இல்லையே -
கற்பனைக் கனா எனக்கில்லையே
நிஜமான உன்னை
நிழலாக எப்படி சிருஷ்டிப்பது?
நான் பார்த்தனா? -இல்லையே -
காண்டீபம் என்னிடம் இல்லையே
சாரதியாய் நீ வந்தாலும்
தேரிழுக்க எப்படிச் சொல்வது?
நான் ராதையா? - இல்லையே -
குழல் தந்த போதை எனக்கில்லையே
மயக்கம் இல்லையெனில்
குழப்பம் ஏன் வந்தது?
நான் தாசனா? - இல்லையே -
தாசனாகும் யோகம் எனக்கில்லையே
தாகம் இல்லையெனில்
என்னைக் கவிபாட யார் சொன்னது?
நான் யசோதையா? - இல்லையே -
தாலாட்டும் யோகம் எனக்கில்லையே
தாயுணர்வும் இல்லையென்றால்
ததும்பும் பாசம் ஏன் வென்றது?
நான் குசேலனா? - இல்லையே -
கேட்பதும் கொடுப்பதும் என்னிடமில்லையே
நெருக்கம் இல்லையெனில்
நட்புணர்வென் நினைவை ஏன் பறித்தது?
நான் ஆழ்வாரா? - இல்லையே -
பாடிப் பணிவது நானில்லையே
பக்தி இல்லையெனில்
உள்ளம் நெகிழ்ந்தேன் பரவசமானது?
பாசமா, பக்தியா, நட்பா, காதலா -
பயமா, பிரேமையா, மதிப்பா, ஆளுமையா?
கேளவிக் கணைகள் துளைக்கும் போது
திணறிப் போகிறேன் -
வார்த்தையின்றி ஓசையின்றி பதில் வரும்போது
சிலிர்த்துப் போகிறேன்.
பிரிவென்ற துயர் வரும்போது
துடித்துப்போகிறேன்.
பேதை, நான்
பேதலித்துப் போகிறேன்.
நவரசக்கலவையாய் நான்
சிதறுண்டு போகிறேன்.
பிரித்துப் பார்த்தால் நிறமாலை -
வ ( எ ) ண்ணங்களை
இணைத்துப் பார்த்தால்
ஒளி ஒன்றுதான் !
ஆளவும் ஆண்டு கொண்டு
ஆளுமைக்கும் உடபட்ட
நான் யார்?
இந்தக் கண்ணாமூச்சியில்
கண்ணைக் கட்டிவிட்டது யார்?
கண்ணைக் கட்டிக் கொண்டது யார்?
நம் கணக்கில்
ஒன்றும் ஒன்றும் ஒன்றுதான்
இல்லையா?
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-10-02